கேரளா தியேட்டர்கள் ஸ்டிரைக் : தமிழகத்தில் எதிரொலிக்குமா ?

ஓடிடியில் நான்கு வாரங்களுக்குள்ளாகவே புதிய திரைப்படங்களைக் கொடுக்கும் உரிமை குறித்து தியேட்டர்கார்கள் ஏற்கெனவே கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவற்றையும் மீறி பலரும் அந்த நான்கு வார காலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஓடும் படமாக இருந்தாலும் கூட நான்கு வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாவதற்க தயாரிப்பாளர்கள் உரிமைகளை விற்கக் கூடாது எனக் கூறி வருகின்றனர் தியேட்டர்காரர்கள்.

கேரளாவில் வெளியான '2018' திரைப்படம் 150 கோடி வசூலைக் கடந்து 200 கோடியை நோக்கி போய்க் கொண்டிருந்த நிலையில் அப்படம் நேற்று ஓடிடியில் வெளியானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள அனைத்துத் தியேட்டர்களையும் நேற்றும், இன்றும் மூடி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர் தியேட்டர்காரர்கள்.

மேலும், சில படங்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என படம் வெளியான சில நாட்களிலோ அல்லது முன்பாகவோ கூட செய்திகள் வந்துவிடுகிறது. அதனால், படத்தை ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம், தியேட்டர்களில் எதற்குப் போய் செலவு செய்து பார்க்க வேண்டும் என்ற மனநிலை பொதுமக்களுக்கு வந்துவிடுகிறது.

ஓடிடிக்களில் படங்களை வெளியிட நான்கு வாரங்கள் என்பதை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்பதுதான் தியேட்டர்காரர்களின் கோரிக்கை. அதோடு, படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பை முன்னதாகவே வெளியிடக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இந்த பாதிப்பு கேரளாவிற்கு மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்.

தமிழகத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே மக்கள் வருகிறார்கள். இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களைப் பார்க்கவோ, சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்கவோ மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிப்பட்ட படங்கள் ஓரிரு நாட்களுக்கோ அல்லது ஓரிரு காட்சிகளுக்கோதான் தாங்குகின்றன என்பது இங்குள்ள தியேட்டர்காரர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு முன்பு பைரசியை எதிர்த்து தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கேரளாவில் தற்போது ஓடிடியை எதிர்த்து நடைபெறும் தியேட்டர் மூடல் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிக்குமா, அல்லது இங்கு தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேச்சு வார்த்தை நடத்துவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.