\"15 வயதில் கர்ப்பமடைவது சாதாரணமானதுதான்.. மனு ஸ்மிருதியை படியுங்கள் தெரியும்!\" குஜராத் ஐகோரட்

அகமதாபாத்: 14, 15 வருடங்களில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயதில் குழந்தை பெறுவதும் சாதாரணமானது என்று வழக்கு ஒன்றின் விசாரணையின் போது குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் பாகிக்கப்பட்ட 16 வயது மைனர் சிறுமியின் 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி அந்த சிறுமியின் தந்தை குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி சமீர் ஜே. டேவ் தலைமையிலான பெஞ்சு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது விசாரணையின் போது தான் 14-15 வருடங்களில் திருமணம் செய்து கொள்வதும், அதைத் தொடர்ந்து 17 வயதை அடைவதற்குள் குழந்தை பெறுவதும் கடந்த காலங்களில் சாதாரணமானது என்று நீதிபதி தெரிவித்தார்.

வழக்கு: இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம், “நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்.. ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள்.. அப்போதெல்லாம் (திருமணம் செய்ய) அதிகபட்ச வயதே 14-15 வயது தான்.. 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனுஸ்ம்ருதியில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதேநேரம் கருவுக்கு 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பது குறித்து அவர் தனது அறையில் மருத்துவர்களுடன் ஆலோசித்ததாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், வழக்கின் சூழலை கருத்தில் கொண்டு, ராஜ்கோட் மருத்துவமனையின் மருத்துவர் அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையை நடத்த உத்தரவிட்டார்.

மேலும், அந்த சிறுமிக்கு ஆசிஃபிகேஷன் பரிசோதனையை நடத்துமாறும், மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை பெறுமாறும் டாக்டர்கள் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டாக்டர் குழு: நீதிபதி மேலும் கூறுகையில், “இந்த சோதனைகளை நடத்தி, அதன் முடிவுகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.. கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பது நல்லதுதானா என்பது குறித்து மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.. மருத்துவ ரீதியாக கரு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் தேவை” என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சிறுமிக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறுவதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கமாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “தாய் அல்லது கருவில் ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலனை செய்வோம். அதேநேரம் இருவரும் நலமாக இருந்தால் கருவை கலைக்க அனுமதிப்பது கடினம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், கருவை கலைக்க உத்தரவிட்டாலும், அந்த செயல்முறையில்7 மாத கரு உயிருடன் பிறக்கும் சாத்தியம் குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. மேலும், தத்து கொடுக்கும் வழிகள் குறித்தும் பரிசீலனை செய்யுமாறு சிறுமியின் தந்தை தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுரை கூறியது.

சட்டம் என்ன: கருக்கலைப்பு மருத்துவச் சட்டத்தின் படி, கருக்கலைப்புக்கான உச்சவரம்பு 24 வாரங்கள் ஆகும்.. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தால் பெண்ணின் உயிருக்கு அல்லது மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால் கரு கலைக்க அனுமதி தரப்படும். இருப்பினும், நீதிமன்றம் தனக்கு இருக்கும் பரந்த அதிகாரங்களைக் கொண்டு, பலாத்காரம் போன்ற சில அரிய வழக்குகளில் 24 வாரங்களுக்கு மேலும் கர்ப்பத்தை கலைக்க அனுமதி தர முடியும்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.