Manipur : மீண்டும் மணிப்பூரைச் சூழும் `கலவர மேகம்' … முடிவுக்கு வராத மோதல் – என்ன நடக்கிறது அங்கே?

ஒரு மாதத்தைக் கடந்து மணிப்பூரில் வன்முறை நீடித்துவருகிறது. இந்த நிலையில், மேற்கு இம்பால் மாவட்டத்தில் ஆம்புலன்ஸுக்கு ஒரு கும்பல் தீவைத்ததில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுவனை, அவனுடைய தாயாரும் மற்றொரு உறவினரும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அப்போது, ஒரு கும்பல் ஆம்புலன்ஸை வழிமறித்து தீவைத்தது. அதில், அந்தச் சிறுவன் உட்பட மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

மணிப்பூர் வன்முறையில் தீக்கிரையான கார்

சில கி.மீ தொலைவுக்கு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் பாதுகாப்புடன் சென்ற ஆம்புலன்ஸ், அதன் பிறகு காவல்துறையின் பாதுகாப்பில் சென்றிருக்கிறது. அப்படியிருந்தும்கூட, அந்த ஆம்புலன்ஸுக்கு வன்முறை கும்பல் தீவைத்திருக்கிறது.

முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மையினராக இருக்கும் மைதேயி இனத்தவர் தங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியல் அதிகாரத்திலும் வலிமையுடன் இருக்கும் மைதேதி இனத்தவருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கிவிட்டால், தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் குக்கி உள்ளிட்ட பழங்குடியினருக்கு இருக்கிறது. எனவே, மைதேயி இனத்தவரின் கோரிக்கைக்குப் பழங்குடி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணிப்பூரில் அமித் ஷா

இந்த விவகாரத்தையொட்டி, இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டு, அது பெரும் வன்முறையாக வெடித்தது. வீடுகள், வழிபாட்டுத்தலங்கள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இரு தரப்பினரிடையிலான மோதல்களில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுக்கடங்காத நிலையில், ராணுவம் வரவழைக்கப்பட்டது. அதன் பிறகு, கலவரம் கட்டுப்படுத்தப்பட்டாலும், வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. சமவெளியிலும், மலைப்பகுதிகளிலும் வன்முறையால் ஏராளமான வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. வீடு வாசல்களை இழந்த சுமார் 37,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றன.

வன்முறை தொடங்கி மூன்று வாரங்கள் கழித்து மணிப்பூருக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மணிப்பூர் வன்முறை குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். அமித் ஷா வந்துசென்ற பிறகும் மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து டெல்லியிலுள்ள அமித் ஷா இல்லத்தின் முன்பாக குக்கி சமூகத்தினர் ஜூன் 7-ம் தேதி போராட்டம் நடத்தினர்.

மோடி, அமித் ஷா

குக்கி பெண்கள் அமைப்பு சார்பில் அமித் ஷா இல்லத்தின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், மைதேயி தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘அமைதியை நிலைநாட்டுவதாக நீங்கள் அளித்த வாக்குறுதி எங்கே போனது?’ என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். வன்முறை கும்பல் தீவைத்ததால் ஆம்புலன்ஸுக்குள் தீயில் கருகி உயிரிழந்த சிறுவனின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர். இதேபோல, மே 29-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய குக்கி பெண்கள் அமைப்பினர், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரினர். 

மேலும், இரு சமூகத்தினரிடையே மிகப்பெரிய அளவுக்கு மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து, ஒரு மாநிலமே நிலைகுலைந்து போயிருக்கும் சூழலில், அது பற்றி பிரதமர் மோடி மௌனம் காப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘மணிப்பூரை கடந்த ஏழு வாரங்களாக பேரழிவு சூழ்ந்திருக்கிறது. ஒரு மாதம் கழித்துத்தான் மத்திய உள்துறை அமைச்சர் அங்கு சென்றார். ஆனால், பிரதமர் இன்னும் மௌனம் காத்துவருகிறார். மணிப்பூருக்குச் சென்று இரு சமூகங்களின் நல்லிணத்துக்காக அவர் வேண்டுகோள் விடுக்காதது ஏன்?’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்திருக்கிறார்.

மணிப்பூரில் அமித் ஷா

இரு இனங்களைச் சார்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டு ஒரு மாநிலமே நிலைகுலைந்திருக்கும்போது, பிரதமரும் அங்கு சென்று மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.