தமிழக பக்தர்கள் சென்ற பேருந்தில் தாவி ஏறிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள்..! பரபரப்பான சிசிடிவி காட்சி

கோவையில் இருந்து வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ள தமிழக பக்தர்களின் உடமைகளை குஜராத் அருகே ஓடும் பேருந்தில் தாவி ஏறிய கொள்ளையர்கள் திருடிச்செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சினிமாக்களில் வருவது போல இரு சக்கர வாகனத்தில் வந்து ஓடும் பேருந்தில் தாவி ஏறி கைவரிசை காட்டும் குஜராத் கொள்ளையர்கள் இவர்கள் தான்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி,சாய்பாபா கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.

காசி உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு சென்று விட்டு 7ம் தேதி இரவு ஒரிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகளை சரி பார்த்த போது, சிலரது உடமைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்தின் பின்பக்கம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

பேருந்தின் வேகத்துக்கு இணையாக ஒருவன் இருசக்கரவாகனத்தை பின்னால் ஓட்டி வர, மற்றொரு கொள்ளையன் பேருந்தின் பின் பக்கம் தாவி ஏறி மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை தார்பாயை கத்தியால் கிழித்து வெளியே எடுத்து கீழே வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

சில உடமைகளை கீழே எடுத்து வீசிவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து வாயில் கத்தியை கவ்வியப்படியே கீழே இறங்கிய கொள்ளையன் இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளையடித்துள்ளனர். குஜராத்தை அடைந்ததும் இந்த சம்பவம் தெரிய வந்தது. துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ஷ்டவசமாக பணம் மற்றும் தங்க நகைகள் பேருந்தின் உள் பகுதியில் வைத்ததால் தப்பியது என்றார்.

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலும் , பெரும்பாலான வட மாநிலங்களிலும் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து ஓடும் லாரியில் ஏறி தார்பாயை கிழித்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் சுற்றுலா சென்ற பேருந்தில் ஏறி, தார்பாயை கிழித்து உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது. 10 பேரது உடமைகள் பறிபோன நிலையில் தமிழக பக்தர்கள் தங்கள் சுற்றுலாவை தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.