An old woman who lost Rs 5 lakh in fraud in the name of Prime Ministers office | பிரதமர் அலுவலகம் பெயரில் மோசடி ரூ.5 லட்சத்தை இழந்த மூதாட்டி

புதுடில்லி: புதுடில்லியில் பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்தி அதிகாரிகள் போல் நடித்து, மூதாட்டியிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுடில்லியில் வசிக்கும் 60 வயது மூதாட்டி, தனக்கு சிலர் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக மிரட்டல் விடுத்து, 5 லட்சம் ரூபாய் பறித்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

‘பார்சல்’

இதில் அவர் கூறியதாவது: கடந்த மாதம், ‘கூரியர்’ நிறுவனம் ஒன்றில் இருந்து பேசிய நபர், என் பெயரில் வட அமெரிக்க நாடான கனடாவுக்கு ‘பார்சல்’ ஒன்று புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கான பொருள் போல் உள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக புகார் அளிக்கும்படியும் அவர் கூறினார்.

அவர் கொடுத்த மொபைல் எண்ணில் சிப் செஜோல் என்பவரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் உயரதிகாரி என கூறப்பட்ட ஒருவரிடம் என்னை பேச வைத்தார். அவர், ‘இது பயங்கரவாதம் தொடர்பான விவகாரம் என்பதால், உங்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என்றார்.

அடுத்து, என் பெயர், ஆதார் எண் போன்றவற்றை பயன்படுத்தி மும்பை வங்கி ஒன்றில் ரகசிய கணக்கு துவங்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இவற்றை நான் மறுத்த போது, என் உதவிக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து வழக்கறிஞர் நிஷாந்த் சுக்லா என்பவரை நியமித்துள்ளதாக அந்த உயரதிகாரி கூறினார்.

பின், என்னிடம் பேசிய சுக்லா என்பவர், ‘450 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட விபுல் ஜெயின் என்பவரின் சதியால், உங்கள் மேல் பயங்கரவாத ஆதரவு முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்றார். இதில் இருந்து என்னை காப்பாற்ற முன்ஜாமின் எடுக்க வேண்டி உள்ளதால், 5 லட்சம் ரூபாயை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அவர் கூறினார்.

பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் மற்றும் கைதில் இருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள, நான் 5 லட்சம் ரூபாயை அவர்களுக்கு அனுப்பினேன். இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரில் தலையிட்டுள்ளதால், இது குறித்து யாரிடமும் விவாதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கூறினர்.

மர்ம கும்பல்

இதன் பின், அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், ஏமாற்றப்பட்டதை அறிந்து புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்தி கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

கடந்த மாதம், புதுடில்லியைச் சேர்ந்த பெண் டாக்டரிடம், இதேபோல் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, ரிசர்வ் வங்கி அதிகாரி, போலீஸ் உயரதிகாரி எனக் கூறி, 4.5 கோடி ரூபாயை ஒரு மர்ம கும்பல் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.