இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியும், இஷாந்த் சர்மாவும் கிரிக்கெட்டில் ஆரம்ப காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாவார். 17 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்த நாட்களில் இருந்து இருவரும் ஒன்றாக விளையாடி வருகின்றனர். மேலும் இருவரும் டெல்லி மற்றும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர்.
கோலி உடனான முதல் சந்திப்பு
பல ஆண்டுகளாக, கோலியுடன் நட்பில் இருக்கும் இஷாந்த் சர்மா, கோலியின் வளர்ச்சி மட்டுமின்றி அவரின் அனைத்து உயர்வு தாழ்வையும் கண்டுள்ளார். இஷாந்த் சர்மா சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், விராட் கோலி உடனான தனது முதல் உரையாடல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தற்போது இந்திய அணியின் பாராமுகத்தில் இருக்கும் இஷாந்த் சர்மா, ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி 17 வயதுக்குட்பட்டோருக்கான முகாமின் போது, கோலியை முதலில் தான் சந்தித்ததாக இஷாந்த் வெளிப்படுத்தினார்.
பந்துவீச்சை அடித்து நொறுக்கிவிட்டார்
“டெல்லி 17 வயதிற்குட்பட்டோருக்கான அணி சோதனை போட்டியின்போது நான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். நான் சிறிய ஷார்ட்ஸ் அணிந்திருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர் ஏற்கனவே இந்தியா அண்டர் 19 விளையாடியிருந்தார், அதனால் நான் அவருடைய பெயரை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் அவரை அப்போது ‘விரு’ என்று அழைப்பார்கள். எங்கள் போட்டி மேற்கு டெல்லி கிரிக்கெட் அகாடமியில் அவர் என் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். நஜாப்கரில் ஒரு சாலை போல் அந்த ஆடுகளம் தட்டையாக இருந்தது” என இஷாந்த் கூறினார்.
முதல் உரையாடல்
விராட் கோலி உடனான தனது முதல் உரையாடலையும் இஷாந்த் நினைவுக்கூர்ந்தார். “நான் எப்படியோ அண்டர் 17 சோதனை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னிடம் உங்கள் அளவுக்கு ஏற்ற ஷார்ட்ஸை வாங்கவும் என்று நகைச்சுவையாகச் சொன்னார். அப்போது நான் மிகவும் வெட்கப்படுவேன், மற்றவர்களுடன் எப்படி பழகுவது என்று தெரியாது. டெல்லி அண்டர் 17 விளையாடுவது எவ்வளவு பெரியது என்று எனக்குத் தெரியாது. எனது தந்தை எப்போதும் ‘குறைந்தபட்சம் ரஞ்சி டிராபியில் நுழைய முயற்சி செய். அதன்மூலம், உனக்கு அரசு வேலை கிடைக்கும்’ என சொல்லிக்கொண்டே இருப்பார். நான் ஒருநாள் இந்திய அணியில் விளையாடுவேன் என்று யாரும் நினைக்கவில்லை.
கோலி என்றால் பார்ட்டி தான்
விராட் கோலி வாழ்வின் அனைத்து கட்டங்களையும் நான் பார்த்திருக்கிறேன். பார்ட்டியில் இருந்து டாட்டூ வரை, ஃபிட்னஸ் ஃப்ரீக் முதல் டாப் ஃபெர்ஃபார்மர் வரை, அவர் தனது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் பார்ட்டிகளை எப்போதும் விரும்புவார். ஒரு சமயம், கொல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின் போது, அவர் இரவு முழுவதும் பார்ட்டியை கொண்டாடியிருந்தார். ஆனால் அடுத்த நாள் 250 ரன்கள் எடுத்தார். அவர் அன்றைய நாள் ஆட்டமிழக்காமல் இருந்தார். நாங்கள் அண்டர் 19 டெல்லி மாநில அணியில் விளையாடி வருகிறோம்” என்றார். கோலி மற்றும் மற்ற இந்திய வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். இந்திய அணியின் அடுத்த ஆட்டம் அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளில் தொடங்குகிறது.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு கேப்டன் இவர் தான் தகுதியானவர் – ரவி சாஸ்திரி