குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டது… விசாரணை அறிக்கையில் தகவல்!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தஸ்தகீர் – அஜிஸா தம்பதி. இவர்களது ஒன்றரை வயது மகனுக்கு தலையில் நீர் கோர்த்த பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து அந்த குழந்தையின் கை மேலும் அழுகியதால், குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது. குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டில் அப்போது பணியில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் குழந்தையை நேரில் சென்று பார்த்த அமைச்சர் மா சுப்பிரமணியம், கவனக்குறைவு கண்டறியப்பட்டல் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார்.

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ அல்லது மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை என்றும் வென்பிளான் என்ற ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர் என்றும் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுவதாகவும் மருத்துவ விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.