புதுடில்லி : ஆப்ரிக்க நாடான, தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.,யின் கிளையை துவங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
நாடு முழுதும், 23 இடங்களில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.
என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிட்ட, தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது.
சமீபத்தில், இதன் கிளை, ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் துவங்கப்பட உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர், காமகோடி தெரிவித்திருந்தார்.
இதற்கான, ஒப்பந்தம் இன்று (ஜூலை.,6)ம் தேதி கையெழுத்தாகி உள்ளது.
இது குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வெளியுறவுத்துறை அமைச்சர், ஜெய்சங்கர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக, தான்சானியா சென்றுள்ளார்.
அங்கு, தான்சியா தீவு நாடான சான்சிபாரில், அந்நாட்டு அதிபர் ஹூசைன் அலி முவின்யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த வளாகம் இந்தியாவுக்கும், தான்சானியாவுக்கும் இடையேயான, நீண்டகால நட்பை பிரதிபலிப்பக்கிறது.
ஆப்ரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவை உருவாக்குவதில், இந்தியா கவனம் செலுத்துவதை நினைவூட்டுகிறது.
ஒப்பந்தப்படி, தான்சானியாவில் துவங்கப்பட உள்ள ஐ.ஐ.டி.,யில் கல்வி திட்டங்கள், பாடத்திட்டங்கள், மாணவர் தேர்வு அம்சங்கள் மற்றும் கற்பித்த விபரங்கள் ஆகியவை, சென்னை ஐ.ஐ.டி.,யால் மேற்கொள்ளப்படும்.
![]() |
இங்கு, பயிலும் மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யால் பட்டமும் வழங்கப்படும்.
அதற்கான, செலவுகள் சான்சிபார் – தான்சானியா அரசால் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
