சொத்து பிரச்னை: விக்னேஷ் சிவன் மீது பெரியப்பா புகார்

நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன், திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை சேர்ந்தவர். இவரது தந்தை சிவக்கொழுந்து லால்குடியில் வசித்து வந்தார். விக்னேஷ்சிவன் தந்தையுடன் பிறந்தவர்கள் 9 பேர். விக்னேஷ் சிவனின் தந்தை தனது சகோதரர்களின் அனுமதியின்றி சட்டவிரோதமாக பல பூர்வீக சொத்துக்களை விற்றிருப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

கோயம்புத்தூரில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம், அவரது மனைவி சரோஜா ஆகியோர் லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்களுக்கு தெரியாமல் எங்கள் தம்பி சிவக்கொழுந்து எங்கள் பொதுசொத்தை ஏமாற்றி விற்று விட்டார். எனவே மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் மோசடி வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து குஞ்சிதபாதம் நிருபர்களிடம் கூறியதாவது: இருதயத்தில் எனக்கு நான்கு குழாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்காக எனக்குரிய சொத்தை விற்க முடிவு செய்தேன். ஆனால் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்று விட்டார். இது குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு என்றும், மீதி பங்குகள் மற்ற எட்டு பேருக்கும் உரியது என தீர்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து பலமுறை நாங்கள் விக்னேஷ் சிவனிடம் கூறியும் அவர் பிரச்னையை தீர்க்க மறுக்கிறார். விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி உதவினால் மட்டுமே இந்த பிரச்னை தீரும். எனவே விக்னேஷ் சிவன் சொத்தை விற்க உதவ வேண்டும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.