சென்னை: வாகன புழக்கம் அதிகமுள்ள சென்னையில் சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. நடைபாதைகள் அமைக்கப்பட்ட பிறகு வாகன இடையூறும் இல்லாமல் சிரமமின்றி பாதசாரிகள் நடந்து செல்ல முடிகிறது.
ஆனால், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் பாதசாரிகளுக்கு இது சாத்தியமாவதில்லை. தினமும் லட்சக் கணக்கான பாதசாரிகள் வாகன இடையூறு பிரச்சினையை சந்திக்கின்றனர். புரசைவாக்கம், தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நடை பாதைகளை வாகனங்களும், சாலையோர வியாபாரிகளும் தான் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.
இதில், வியாபாரிகள் கூட, பாதசாரிகளுக்காக 2 அடி பாதையையாவது விட்டு வைத்திருப்பார்கள். ஆனால், வாகன ஓட்டிகளோ, மொத்தமாக நடை பாதையை வளைத்து போட்டு, நட்ட நடுவில் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால், நடை பாதையை விட்டு கீழே இறங்கி சாலையில் நடந்து செல்கின்றனர். இது எப்போதும் பாதசாரிகளுக்கு ஓர் இடையூறாகவே இருக்கிறது. குறிப்பாக முதியோர்களுக்கு இவை பெரும் தலைவலி.
நடைபாதை ஆக்கிரமிப்பால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சில நேரங்களில் வாகன விபத்துக்களில் சிக்குவதும், அதனால் உயிர் சேதமும் ஏற்படுகிறது. நடைபாதை என்று பெயர் பலகை வைப்பதற்கு பதில், ‘நடைபாதை எனும் வாகன நிறுத்துமிடம்’ என்று தான் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பாதசாரிகள் புலம்பும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

இது குறித்து திருமங்கலத்தை சேர்ந்த சசி கூறும்போது, ‘சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் பாதசாரிகளுக்கு பெரும் தலை வலியாக இருக்கிறது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் நடைபாதை வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்துவிட முடியும்,’ என்றார்.

தண்டையார்பேட்டையை சேர்ந்த சசிரேகா கூறும்போது, ‘நடைபாதையில் வாகனங்களை நிறுத்திச் செல்வதால் ஒவ்வொரு முறையும் வாகனங்களைத் தாண்டிச் செல்ல சாலையில் இறங்க வேண்டியிருக்கிறது. அப்போது சாலையில் வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் என்னை போன்ற பாத சாரிகளைத் திட்டிவிட்டுச் செல்கின்றனர்.
ஆனால், நடக்க வேண்டிய இடத்தில் வாகனங்களை நிறுத்துவோருக்கு யார் அறிவுரை வழங்குவது. வெளிநாடுகளில், இதுபோன்று நடைபாதைகள் ஆக்கிரமிப்பை அதிகளவில் பார்க்க முடியாது. அதுபோன்ற விழிப்புணர்வு நமக்கு இருப்பது இல்லை. பார்க்கிங் வசதி இருந்தால் மட்டும், வாகனங்களை வாங்க வேண்டும்.
இல்லையென்றால், அது அவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இடையூறுதான். அதேபோல், முக்கிய சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், காவல்துறை, மாநகராட்சி போன்ற துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கும் வாகன ஓட்டிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை நடப்பதற்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பார்க்கிங் வசதி இருக்கிறதா என்று ஆய்வு செய்த பிறகு தான் கட்டுமானங்களுக்கு சென்னைமாநகராட்சி அனுமதி வழங்குகிறது. ஆனால், பலர் பார்க்கிங் வசதி இல்லாமல், சாலையோர நடை பாதைகளில் வாகனங்களை விட்டு செல்கின்றனர்.
முதலில், அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். சென்னை மாநகராட்சி சார்பில், பார்க்கிங் வசதி அமைந்துள்ள பகுதிகள், பார்க்கிங் வசதி இல்லாத பகுதிகள் என பிரித்து கணக்கெடுப்பு எடுத்து ஆய்வு மேற்கொண்டு, பார்க்கிங் வசதிகள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
அதேபோல், நடை பாதைகளை ஆக்கிரமித்திருக்கும் சாலையோர வியாபாரிகளை பொருத்தவரை, அதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் சாலையோர வியாபாரிகள் குழுவுடன் கலந்தாலோசித்து, நடைபாதை ஆக்கிரமைப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு நிரந்தர தீர்வு காண முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை போக்குவரத்து கூடுதல்காவல் ஆணையர் கபில்குமார் சி சரத்கர் கூறுகையில், ‘சென்னையில் 2 கி.மீ இடைவெளிக்கு போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட்டு, சாலையோரங்கள், நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். அதையும் மீறி நடைபாதை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இவ்வாறு தினசரி 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. அதேபோல், மெக்கானிக் கடைகள் இருக்கும் பகுதிகளில், பழுது நீக்கப்படும் வாகனங்கள், நடைபாதையில் நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பாதாசாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், சென்னை மாநகராட்சி மூலம் கேட்பாரற்ற வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் பிறகு அவை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.