பெங்களூரு: கர்நாடகாவிலிருந்து தக்காளியை வாகனத்துடன் திருடிச் சென்று தமிழகத்தில் விற்பனை செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ், தனக்குச் சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். ஜூலை 8ல், 2,000 கிலோ தக்காளியை, பொலிரோ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ஓட்டுனர் சிவண்ணாவுடன் கோலாருக்கு புறப்பட்டார்.
இரவு 10:45 மணியளவில் துமகூரு சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்தனர். அப்போது பைக்கில் வந்த இருவர், தங்கள் பைக் மீது மோதியதாக தகராறு செய்து, விவசாயியையும், ஓட்டுனரையும் பொலிரோ வாகனத்தில் கடத்திசென்றனர்.
சிறிது துாரம் சென்ற பின் ஓட்டுனரையும், விவசாயியையும் கீழே இறக்கிவிட்டு தமிழகத்தை நோக்கி தப்பிச் சென்றனர்.
விவசாயி மல்லேஷ், போலீசில் புகார் செய்தார். விசாரணையை துவக்கிய போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன், 38, இவரது மனைவி சிந்து, 36, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களுடன் தொடர்புள்ள மூவரை தேடி வருகின்றனர். திருடிய தக்காளியை, 1.50லட்சம் ரூபாய்க்கு இவர்கள் விற்பனை செய்து பணத்தை பங்கிட்டு கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
பொலிரோ வாகனத்தை தேவனஹள்ளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த வாகனத்தை போலீசார் மீட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement