புதுடில்லி, கடந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதி யில், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் தேனி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி., இவர்.
வேட்புமனு தாக்கலில் சொத்து விபரங்களை மறைத்து தாக்கல் செய்ததாக ரவீந்திரநாத்துக்கு எதிராக, தேனி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்கு பின், ‘தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது’ என, கடந்த ஜூலை 6ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மேல் முறையீடு செய்வதற்காக தீர்ப்பு, 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சூர்ய காந்த், தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் ரவீந்திரநாத் மற்றும் எதிர் மனுதாரர் மிலானி ஆகியோர், இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் அக்., 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், ரவீந்திரநாத் எம்.பி., பதவியில் தொடரும் நிலை உருவாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்