தமிழகத்திற்கு 10,000 கன அடி காவிரி நீர்… ஒரே போடாய் போட்ட டெல்லி… கர்நாடகாவிற்கு கிடுக்குப்பிடி!

இயற்கை அன்னை வாரி வழங்கும் காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்த ஆறு பாயும் வழித்தடங்களில் உள்ள மாநிலங்கள் உரிய முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சரியாக பகிர வேண்டியது அவசியமாகிறது. இதில் தமிழகத்தின் தேவை தான் பெரிதாக காணப்படுகிறது. மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் காவிரி நீரால் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா வழிபாடு

காவிரி நீர் பங்கீடு

ஆனால் போதிய நீரை கர்நாடகாவிடம் இருந்து பெறுவதற்குள் பெரிய போராட்டமே நடந்து விடுகிறது. இந்த விஷயத்தில் நீதிமன்ற கதவுகளை தட்டி தட்டி இறுதியில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் வழிகாட்டுதலின் படி கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்கின்றன. பருவமழை கொட்டித் தீர்க்கும் போது கர்நாடகா ஓரளவு தண்ணீரை தந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் திண்டாட்டம் தான்.

கர்நாடகா அணைகள்

தற்போது தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் போதிய நீரை விடுவிக்கவில்லை. கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 37.9 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு பற்றாக்குறையாக இருக்கிறது. இதை சரியான முறையில் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிடுமாறு டெல்லியில் இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

டெல்டா விவசாயிகள்

ஆனால் கர்நாடகா தரப்பு முரண்டு பிடித்துள்ளது. இதன் காரணமாக கூட்டத்தில் இருந்து பாதியிலேயே தமிழக அதிகாரிகள் வெளியேறி விட்டனர். பாசனத்திற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகா அரசின் முடிவு பேரிடியாய் வந்திறங்கியுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

மேலாண்மை ஆணையம் உத்தரவு

அதாவது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். அதாவது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரின் அளவு 53 டி.எம்.சி ஆகும். இதில் தற்போது வரை 15 டி.எம்.சி மட்டுமே கர்நாடகா அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வலியுறுத்தல்

எஞ்சிய டி.எம்.சி தண்ணீருக்காக தான் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லிக்கு கடிதங்களும், அமைச்சர்களும், தமிழக அரசின் பிரதிநிதிகளும் நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு மதிக்குமா? உரிய முறையில் காவிரி நீரை திறந்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.