புதுடெல்லி: மக்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய பிறகு, மணிப்பூர் மாநில குகி சமுதாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக பழங்குடியினர் அந்தஸ்து கோரும் மைத்தேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. வன்முறைக்கு இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றமும் முடங்கி உள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற மக்களவையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. 2-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
நாடாளுமன்றத்தில் பேசிய பிறகு அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு மணிப்பூர் மாநில குகி சமுதாயத்தினர் அடங்கிய ஐடிஎல்எப் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
வன்முறையில் உயிரிழந்த ஐடிஎல்எப் உறுப்பினர்கள் 35 பேரின்உடல்களை கடந்த 3-ம் தேதி ஒரே இடத்தில் அடக்கம் செய்ய அந்த அமைப்பு திட்டமிட்டது. இதற்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால், உடல்களை அடக்கம் செய்யும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்தும் ஐடிஎல்எப் அமைப்பினர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஏற்கெனவே திட்டமிட்ட பகுதி பிரச்சினைக்குரியதாக இருப்பதால் வேறு இடம் ஒதுக்கும் வரை அமைதி காக்குமாறு அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
ஐடிஎல்எப் அமைப்பினர் அமித் ஷாவிடம் 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கி உள்ளனர். மலைப்பகுதிகளில் போலீஸாரை அனுமதிக்கக் கூடாது, மலைப்பகுதியில் வசிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அமித் ஷா ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.