சென்னை: நிலவை ஒட்டிய இறுதி சுற்றுப் பாதைக்கு சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான ஆயத்த பணி இன்று முதல் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம், ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆக.1-ம் தேதி பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. 5 நாள் பயணத்துக்கு பிறகு ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் தற்போது வலம் வருகிறது.
நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் வகையில், சந்திரயான் சுற்றுப் பாதை உயரத்தை படிப்படியாக குறைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். நிலவை ஒட்டிய இறுதிகட்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை கொண்டு செல்லும் பணி நேற்று காலை 8.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. விண்கலத்தில் இருந்த திரவ வாயு இயந்திரம் இயக்கப்பட்டு, வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்டது. தற்போது நிலவின் தரைப் பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 153 கி.மீ. தூரம், அதிகபட்சம் 163 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலவை சுற்றி வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியபோது, ‘‘நிலவில் தரையிறங்க உள்ள லேண்டரை நிலவின் சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும் பணியை உந்துவிசை கலன் திட்டமிட்டபடி செய்துவிட்டது. நிலவை சுற்றிவரும் உந்துவிசை கலன் ஆக.17-ல் (இன்று) நிலவின் தரைப் பகுதிக்கு நெருக்கமாக வரும்போது, அதில் இருந்து லேண்டர் தனியே பிரிந்துவிடும். அடுத்த சில நாட்களில் லேண்டர் கலன் சுற்றுப் பாதையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லுமாறு அதன் பயணப் பாதை மாற்றப்படும்’’ என்றனர்.