எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான அவதூறு செய்தியை பகிர்ந்தது தொடர்பான எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தொடர்ந்த மனு, நீதிபதி பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகமுத்து, எஸ்.வி.சேகர் கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு இருந்தபோது தவறுதலாக அவரது கை விரல்கள் ‘send’ பட்டனை அழுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே அந்தச் செய்தி ‘ஃபார்வர்டு’ ஆகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டிருந்தபோது அவர் ஏன் சமூக ஊடகச் செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நாகமுத்து, “சமூக ஊடகங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டதாகவும், அதை தவிர்ப்பது கடினம் என்றும் கூறினார். அதற்கு நீதிபதிகள், சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என தாங்கள் கருதவில்லை என்றும், சமூக ஊடகங்களில் இருந்து தாங்கள் விலகி இருப்பதாகவும் குறிப்பிட்டனர். மேலும், எஸ்.வி.சேகருக்கு என்ன வயது என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, அவருக்கு 72 வயதாகிறது என நாகமுத்து தெரிவித்தார்.

அப்போது, “இந்த வயதில்தான் அவர் இதை எல்லாம் செய்கிறாரா? அவர் ஏன் சமூக ஊடக செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்? சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு செய்தி ஒன்றை நடிகர் எஸ்.வி. சேகர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.