சந்திரயானில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர்: `நன்றி நண்பா’ என செய்தி அனுப்பியது

சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்கவுள்ள லேண்டர் வெற்றிகரமாக நேற்று பிரிந்தது.

நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் பூமியை சுற்றிவந்த விண்கலம் ஆகஸ்ட் 1-ல் புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் பயணத்துக்குபின் ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.

இதையடுத்து சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது நிலவின் தரைப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 153 கி.மீ தூரமும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலவை சுற்றி வருகிறது. இந்நிலையில் விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கவுள்ள லேண்டரை பிரிக்கும் முயற்சி நேற்று மதியம் 1.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் நிலவின் தரைப்பகுதிக்கு நெருக்கமாக வந்தபோது சந்திரயானின் உந்துவிசை கலனுடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதை உறுதிசெய்யும் விதமாக ‘இலக்கை அடைவதற்கான பயணத்துக்கு உதவியதற்கு நன்றி நண்பா’ என லேண்டர், உந்துவிசை கலனுக்கு செய்தி அனுப்பியது.

தற்போது உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வருகின்றன. சந்திரயான்-3 திட்டப் பயணத்தில் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றான லேண்டர் பிரிதல் வெற்றி பெற்றது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் திட்டமிட்டபடி பிரிந்தது. லேண்டர் கலனில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சீராகஉள்ளதா எனவும் சரிபார்க்கப்பட்டது. அடுத்தகட்டமாக லேண்டர் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும்பணி இன்று (ஆகஸ்ட் 18) மாலை 4 மணி அளவில் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றுகூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு நிலவில் ஆகஸ்ட் 23-ம்தேதி மெதுவாக தரையிறக்கப்படும். சில மணி நேரங்களுக்கு பின்னர் அதிலிருந்து ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

சந்திரயான்-3 விண்கலமானது உந்துவிசை கலன், லேண்டர், ரோவர் ஆகிய 3 பாகங்களாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இதில் நிலவில் தரையிறங்க உள்ள லேண்டரை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் பணியை உந்துவிசை கலன் (Propulsion Module) முடித்துவிட்டது. அதிலிருந்து லேண்டர் கலனும் பிரிந்துவிட்டது. இனி உந்துவிசை கலன் எரிபொருள் இருப்பை பொருத்து அடுத்த சில மாதங்களுக்கு நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்யும். இது மொத்தம் 2,145 கிலோ எடை கொண்டது.

இந்த கலனில் உள்ள ஷேப் எனும் ஆய்வுக் கருவி நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிர்வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும்.

முதலில் தரையிறங்கும் ரஷ்யாவின் லூனா: ரஷ்யாவும் 1976-க்கு பிறகு, தற்போது லூனா-25 விண்கலத்தை கடந்த ஆக.10-ம் தேதி நிலவுக்கு அனுப்பியது. நிலவின் தென்துருவ பகுதியில் இதை வரும் 23-ம் தேதி தரையிறக்க திட்டமிட்டிருந்த நிலையில், 2 நாட்கள் முன்னதாக 21-ம் தேதியே இதை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கூறியபோது, ‘‘லூனா-25 விண்கலத்தில் உள்ள கூடுதல் எரிபொருள் சேமிப்பு காரணமாக, சுற்றுவட்டபாதையை சுற்றி செல்லாமல், நிலவுக்கு நேரடியான பாதையில் செல்கிறது. முதலில் இறங்கப்போவது யார் என்று விவாதிக்க இது பந்தயம் அல்ல. புதிய விஷயங்களை ஆராய்வதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன’’ என்றார்.

பெங்களூருவில் உள்ள இந்திய வான் இயற்பியல் மைய விஞ்ஞானி கார்த்திக் கூறும்போது, ‘‘விண்கலங்கள் தரையிறங்குவதில் உள்ள போட்டியால், எந்த மாறுபாடும் ஏற்படப்போவதில்லை. ஒவ்வொரு ஆய்வின் மூலம் பெறப்படும் அனுபவ அறிவு, நிலவின் கடந்த கால புரிதலை மேலும் வளப்படுத்தும். தவிர, இப்போட்டியால், நமது விண்வெளி திறன்கள் மேம்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.