ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழக பாஜக கொந்தளிப்பு

சென்னை: “குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை ஒரு மாநில அமைச்சர், முதல்வரின் மகன் தரம் தாழ்ந்து, தரம் கெட்டு பேசுவதா?” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். “செருப்பை கழட்டி அடிப்பாங்க” என்று தமிழக முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரிகமான அரசியலும் கூட. செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்துக்குரியது, சட்டத்துக்குப் புறம்பானது.

ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் ‘செருப்பால் அடிப்பார்கள்’ என்று அர்த்தம் என்றால், திமுக எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்துக்கே தெரியும். 1980, 1984,1991 தேர்தல்களில் தோற்ற திமுகவை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன். 2001, 2011, 2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் திமுகவை செருப்பால் அடித்தார்களா என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014-ம் ஆண்டு மக்களைவை தேர்தலில் மக்கள் திமுகவை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்றுக் கொண்டு தொடர்ந்து திமுக தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா? ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதல்வரின் மகன், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு ‘செருப்பால் அடிப்பாங்க’ என்று பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதிர்ச்சியற்ற , அராஜகமான, அநாகரிகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை தமிழக முதல்வர் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.