ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் டைம் டிராவல் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள `மார்க் ஆண்டனி’ நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பலரும் படத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘மார்க் ஆண்டனி’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பையொட்டி நடிகர் விஷால் ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ரசிகர்களாகிய இந்தத் தெய்வங்கள் மற்றும் மேலே இருக்கும் தெய்வங்களின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்தப் படமும் ஜெயித்தது கிடையாது.

’மார்க் ஆண்டனி’ படம் ப்ளாக்பஸ்டர் என்று பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை மட்டுமில்லாமல் எஸ்.ஜே.சூர்யா, சுனில், மற்ற நடிகர்கள், நடிகைகள் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கம் போன்றவற்றைப் பாராட்டி நீங்கள் ஆதரித்ததற்கு நன்றி. மிகவும் சந்தோஷமாகவும் உள்ளது. நீங்கள் கொடுத்த காசுக்குச் சந்தோசப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் கூட வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதாரப் பாராட்டியும் இருக்கிறார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நல்ல படங்களைத் தருவேன். குறிப்பாக இந்தப் படத்துக்காக ஊக்கம் கொடுத்த நண்பர்கள் எல்லாருக்கும் என்னுடைய நன்றி.
Thank You Very Much Everyone, God Bless pic.twitter.com/LnXb76qcSI
— Vishal (@VishalKOfficial) September 16, 2023
ஒன்றரை வருட உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது. உங்களால் கண்டிப்பாக நான் இன்று நிம்மதியாகத் தூங்குவேன். ஏற்கெனவே நான் உறுதியளித்தபடி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் நான் விவசாயிகளுக்கு வழங்குவேன்” என்று கூறி தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.