‘மேலும், 15 நாட்களுக்கு, 5,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்’ என, காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின், 24 வது ஆலோசனை கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்
வழக்கம்போல தமிழகம் மற்றும் கர்நாடா அரசுகளுக்கு இடையில் வாத பிரதிவாதங்கள் நடந்தன. தமிழகம் சார்பில் 12,500 கன அடி தண்ணீரையாவது திறந்துவிட வேண்டுமென்று கேட்கப்பட்டது.
ஆனால், 3,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியுமென்றும், மழை பொழிவு குறைவு, தண்ணீர் இருப்பு இல்லை என்ற காரணங்களையும் கர்நாடகா தரப்பு அடுக்கியது.
இறுதியாக, காவிரியில் மேலும், 15 நாட்களுக்கு, 5,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட வேண்டுமென்று ஆணையத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு, கர்நாடகா தரப்பில் தரப்பட வேண்டிய நிலுவைத் தண்ணீரின் அளவு என அனைத்து புள்ளிவிபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தை வரும், 26ம் தேதி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழக குழு ஏமாற்றம்
நேற்று மதியம் புதுடில்லிக்கு வந்த தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க., – எம்.பி.,க்களுடன் சேர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ெஷகாவத்தை சந்திக்க முயற்சி செய்தார்.ஆனால், தி.மு.க., – எம்.பி.,க்கள் குழுவால், மத்திய அமைச்சரை நேற்று திட்டமிட்டபடி சந்திக்க முடியவில்லை. பார்லி., கூட்டத்தொடர் நடைபெறும் சமயங்களில் மத்திய அமைச்சர்களை சந்திப்பது மிகவும் எளிதான விஷயம். அப்படியிருந்தும், பார்லி.,க்கு சென்று காத்திருந்தும், அமைச்சர் துரைமுருகனாலும், தி.மு.க., – எம்.பி.,க்களாலும், கடைசிவரையில் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்குடன், திட்டமிட்டபடி சந்திப்பை நடத்த முடியவில்லை. இன்று சந்திப்பு நிகழலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு இல்லத்திற்கு ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர் துரைமுருகன், அங்கு நிருபர்களிடம், கூறியதாவது:மத்திய அமைச்சரைச் சந்தித்தால் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கப் போகிறேன். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள் இயங்குகின்றனவா அல்லது கைவிடப்பட்டு விட்டனவா என்பதுதான் அந்த கேள்வி.மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய நெருக்கடியைத் தந்தாக வேண்டும். அதை தரப் போகிறீர்களா, இல்லையா என்பதையும் கேட்கப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்