தீபாவளி பண்டிகைக்கு வர இருந்தவர் சடலமாக திரும்புகிறார் – உ.பி.யை சேர்ந்த கேப்டன் குடும்பத்தினர் உருக்கம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், பஜிமல் என்ற கிராமத்தில் உணவு தராததால் கிராமவாசி ஒருவரை தீவிரவாதிகள் தாக்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கிராமத்தை ஒட்டியுள்ள கலகோட் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் 3 நாட்களுக்கு முன்பு தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வனப் பகுதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர், கேப்டன் ஷுபம் குப்தா (27). இவர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இதுகுறித்து ஷுபம் குப்தாவின் சகோதரர் ரிஷப் கூறியதாவது: நான் சட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனது அண்ணன் ஷுபம் குப்தாவுக்கு ராணுவத்தில் சேர்வதுதான் மிகப்பெரிய கனவு. ராணுவத்தில் சேர்ந்து கயாவிலுள்ள ஆபீஸர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சி முடித்து மேற்கு வங்கத்திலுள்ள ராணுவப் பிரிவில் இணைந்தார்.

பின்னர் துணை ராணுவப் படையில் சேர்ந்து கடைசியாக ஜம்மு-காஷ்மீரில் பணியில் இருந்தார். எதற்கும் அஞ்சாமல் செயல்படுவார் எனது அண்ணன். தேசத்தின் பாதுகாப்புக்காகவே இருந்தவர் தற்போது தேசத்துக்காக உயிரை விட்டுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைக்கு வீட்டுக்கு வர இருந்தார். ஆனால் கடைசியாக போன் செய்தபோது தீபாவளி முடிந்ததும்தான் வருவேன் என்றார். இப்போது வீட்டுக்கு சடலமாக வர இருக்கிறார். இதை நினைக்கும்போதே கண்கள் கலங்குகின்றன. எனது பெற்றோர் இப்படி கதறியழுது நான் பார்த்ததே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். அவரது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் கதறி அழுததை காண்பது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதைப் போலவே கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தகேப்டன் பிரன்ஜாலும், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரைப் பறிகொடுத்துள்ளார். இதுகுறித்து பிரன்ஜாலின் தந்தை எம்.வெங்கடேஷ் கூறியதாவது: நான் மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (எம்ஆர்பிஎல்) நிர்வாக இயக்குநராக பணிபுரிந்தவன். எனது மகன் பிரன்ஜாலுக்கு முதலில் பெங்களூரு ஆர்.வி. பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆனால் தவிர்த்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு ராணுவத்தில் பணியாற்றுவதுதான் மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது.

முதலில் அவர் விமானப் படையில் சேருவதாக இருந்தார். ஆனால்அவரது உயரம் சற்று குறைவாக இருந்ததால் ராணுவத்தில் இணைந்தார். அவர் செய்த பணிகளைப் பாராட்டி, வரும் டிசம்பர் 9-ம் தேதி அவருக்கு ராணுவத்தில் மேஜராக பதவி உயர்வு கிடைக்கவிருந்தது. ஆனால் அதற்குள் தேசத்துக்காக உயிரை அர்ப்பணித்து விட்டார். கடைசியாக தனது மனைவி அதிதிக்கு போன் செய்தபோது, அவசரமாக தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்குச் செல்வதாகவும், 2 நாட்களில் போன் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக அவர் இறந்த செய்திதான் எங்களுக்குக் கிடைத்தது.

அவரது செல்போன் அழைப்புக்காகக் காத்திருந்த நாங்கள், அவரது உடல் வருவதற்காகக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.