வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு :”சுதந்திரம் என்ற பெயரில், அரசுகளின் தலையீடுகள் இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.
ஆசிய — பசிபிக் பிராந்தியத்தில், நீதித்துறையில் உள்ளோரின் நலனுக்காக செயல்படும், ‘லாஏசியா’ அமைப்பின் கருத்தரங்கம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது.
இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:சுதந்திரம் என்பது, யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தன் விருப்பத்தை ஒருவர் தேர்வு செய்வது என்பதே பாரம்பரியமாக நம்முடைய கண்ணோட்டமாக இருந்து வருகிறது. ஆனால் தற்கால நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக நீதியில் அரசுகளின் பங்களிப்பு, குறிப்பீடு, தலையீடு இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.
அரசின் தலையீடு இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், அவற்றில் பின்தங்கியவர்களை அடக்கி ஆளும் நிலை உருவானதற்கு முக்கிய காரணமாகும்.
மதம், மொழி, ஜாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பதற்கு, சுதந்திரம் குறித்த தவறான கண்ணோட்டமே காரணமாக இருந்து வந்துள்ளது.
தற்போது நாம் செயற்கை நுண்ணறிவு காலத்தில் உள்ளோம். இதில் செயற்கை நுண்ணறிவுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள குழப்பமான விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
இதுபோலவே, சட்டங்களிலும், ஆண்களை உயர்வானவர்களாகவும், பெண்கள் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களாகவும் பாரபட்சம் பார்க்கிறது.இதுபோன்ற பாரபட்சம், பாகுபாடுகளை நாம் உடைத்து வருகிறோம். ராணுவத்தில் பெண்களும் பணியாற்றும் உரிமையை நீதிமன்றம் பெற்றுத் தந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement