பெரிய அளவு சுவாரசியம் நிகழவில்லையென்றாலும் இந்த எபிசோடில் சின்னச் சின்ன விஷயங்கள் நடந்தன.
மூன்றே நபர்கள்தான் நாமினேஷன் பட்டியலில் வந்திருக்கிறார்கள். தினேஷிற்கும் விசித்ராவிற்குமான விரோதம் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது. “வீட்ல இருந்து வருவாங்க. பேசுவாங்க’ என்று சூசகமான தகவலை பூர்ணிமாவிடம் சொல்லியிருக்கிறார் விஷ்ணு. ‘அந்தக் குழந்தையே விஷ்ணுதான்’ என்று நையாண்டி செய்தார் நிக்சன்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
விசித்ரா விரும்பவில்லையென்றாலும் கூட ‘அந்த மாதிரியான’ பாடலுடன்தான் நாள் 78 விடிந்தது. ‘டைட்டில் வின்னர்’ என்று விக்ரமை கிண்டலடிப்பதால் மற்றவர்களின் லட்சணத்தையும் பார்த்து விடுவோம் என்று அதற்கேற்ப பிக் பாஸ் ‘மார்னிங் ஆக்டிவிட்டி’ தந்தாரோ என்னமோ. ‘யாரை டைட்டில் வின்னராக கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை’ என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.
இதில் விக்ரமின் பெயர் ஒருமுறைதான் வந்தது. அர்ச்சனா அவரை நாமினேட் செய்தார். ரவீனாவின் பெயர் பலமுறை வந்தது. இது நியாயமானது. அவர் மணியைத் தூக்கிச் சுமக்கும் பல்லக்காகவே – அதிலும் வெளிப்படையாக – செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வெற்றி குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை. ஆனால் மணியையே ‘லுலுவாய்க்கு’ சொல்லி அதற்கு காமெடியான காரணங்களையும் சொன்னார் ரவீனா. இனி வரும் வாரங்களில் டாஸ்குகள் கடினமாக இருக்கும் என்பதால் விசித்ராவின் பெயரும் பல முறை சொல்லப்பட்டது. (எது.. கடுமையான டாஸ்கு?!.. அந்த பந்து உருட்டுடறதா?!). விஷ்ணுவின் பெயரை மாயா சொல்ல சங்கடத்துடன் சிரித்தார் பூர்ணிமா.
இந்த வாரம் கேப்டன் கிடையாது
இனி எவரும் நாமினேஷனில் இருந்து தப்பிக்கக்கூடாது என்பதால் ஒரு செக்மேட் வைத்தார் பிக் பாஸ். ‘இந்த வாரம் கேப்டன் என்று யாரும் கிடையாது. அனைவருமே சேர்ந்து வீட்டை நிர்வகிக்கலாம். சின்ன வீட்டுக்கு அனுப்ப ஆறு நபர்களை அனைவரும் கூடிப் பேசி முடிவு செய்ய வேண்டும்’ என்பது அவரின் அறிவிப்பு. முன்பெல்லாம் சின்ன வீட்டுக்கு செல்வதை தண்டனையாக கருதி முகத்தை தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போதோ பலரும் குதித்துக் கொண்டு கிளம்பினார்கள்.
விஜய், நிக்சன், தினேஷ் போன்றவர்களுக்கு சமையல் தெரியும் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. ‘விஜய் ஓகே.. நல்லா சமைப்பான். ஆனால் தினேஷ் வேண்டாம். அவரோட டாமினேஷன் கிச்சன்ல அதிகமாக இருக்கும்” என்று விசித்ரா ஆட்சேபித்தார். “அப்படியாப்பா இருந்திச்சு?” என்று மணியிடம் நியாயம் கேட்டார் தினேஷ். “அப்படியில்ல. ஆனா ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கும் போது நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுச்சு” என்று மையமாக சொன்னார் மணி.
மாயாவும் பூர்ணிமாவும் ஒரே இடத்தில் இருப்பதையும் விசித்ரா விரும்பவில்லை. ‘தனியுலகத்துல இருப்பாங்க’ என்கிற விசித்ராவின் ஆட்சேபம் அவர்களுக்கு ஒருவகையில் நல்லதே. ஆனால் இதை மாயா வன்மையாக கண்டித்தார். “நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கறோம்ன்னு சொல்றது மத்தவங்க கருத்து. இதுவரைக்கும் நான் அதைப் பொருட்படுத்தியதில்ல. ஆனா தொடர்ந்து சொல்லிட்டே இருந்தா காண்டாவுது. நானும் பிரச்சினை பண்ணுவேன். இப்படி இந்த வீட்டில் பலர் கூட்டணிகளாத்தான் இருக்காங்க. எல்லோருக்குமே ஆதரவு தேவைப்படுது. நாங்க ஒண்ணா இருக்கறது உங்க கேமை பாதிக்குதா. சொல்லுங்க” என்று வெடித்தார் மாயா.
“ஹலோ.. இந்த விஷயத்தை கண்டிச்சதே நான்தான். அவங்க ஒண்ணா இருந்தா என்ன பிரச்சினைன்னு கேட்டிருக்கேன். ஆனா நீங்க ஒண்ணா இருந்தா மத்தவங்களை கண்டுக்கவே மாட்டீங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்று மிஞ்சியும் கெஞ்சியும் இதற்கு பதில் சொன்னார் விசித்ரா. “யாரும் இங்க பழகறதுல ஒண்ணும் கெட்டுப் போயிடாது. ஒவ்வொருத்தருக்கும் கம்பானியன் தேவைப்படுது. அது கேமை பாதிக்கக்கூடாது. அவ்வளவுதான். இருக்கற வரைக்கும் ஜாலியா இருப்போம். என்ன இப்போ?!” என்று நிக்சன் சொன்னதும் சரியானது. அவர் தனது சுயஅனுபவத்தில் இருந்து பேசுகிறார்.
இறுதியில் நிக்சன், மாயா, தினேஷ், விஜய், பூர்ணிமா மற்றும் அர்ச்சனா ஆகியோர் சின்ன வீட்டுக்குச் செல்லும் நபர்களாக தீர்மானிக்கப்பட்டார்கள். ‘அந்த வீட்டுக்கு இந்த ஆறு நபர்களும்தான் பொறுப்பு. ஆனால் யாரும் எங்கேயும் செல்லலாம். ஆனால் தூங்குவது அவரவர்களின் இடத்தில்தான்” என்று விதியில் கொஞ்சம் சலுகை காட்டினார் பிக் பாஸ். தன்னிடம் விளக்கம் சொல்ல வந்த விசித்ராவிடம் “நான் உங்களை மன்னிச்சிட்டேன். ஆனா இப்ப எதுவும் சொல்லாதீங்க. சூடா இருக்கேன்’ என்பதை இயல்பான குரலில் சொல்லி விட்டு தனியாகச் சென்று அமர்ந்து கொண்டார் மாயா. இப்படி கட்டுப்படுத்தும் தொனியில் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு தனியான திறமை வேண்டும்.
“வீட்ல வந்து பேசுவாங்க”- விஷ்ணு ஹிஹி
‘ஒரு காலத்துல அவரு எப்பேர்ப்பட்ட ரவுடி தெரியுமா?’ என்கிற மாதிரி சண்டைக்கோழியாக சுற்றிக் கொண்டிருந்த விஷ்ணு, ‘இப்பல்லாம் லவ் சாங்காத்தான் கேக்கப் பிடிக்குது. மாமன் கண்ணாலேயே பேசுவேன்டா. அவளுக்குத்தான் புரிய மாட்டேங்குது’ என்று ‘ரணகளத்தின் இடையே கிளுகிளுப்பு’ மோடிற்கு மாறியிருக்கிறார். மாற்றத்திற்கு காரணம் பூர்ணிமா என்பது அடுத்த வாரம் பிறக்கப் போகிற குழந்தைக்கு கூட தெரியும். இப்போது அவர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். “எங்க ஃபேமிலி வரும் போது உன் கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்ணுவாங்க. எதிர்த்துப் பேசாம சொல்றதைக் கேட்டுக்கோ” என்று தயார் செய்தார். “எங்க ஃபேமிலியும் வருவாங்க. நீங்களும் கேட்டுக்கோங்க” என்பது போல் பதிலுக்கு கிண்டலடி தந்தார் பூர்ணிமா. ஆக, இரு வீட்டாரும் வரும் போது தொலைக்காட்சி சீரியல் போல் ஏதாவது ஆகி விடும் போல. (பூர்ணிமா என்ன செய்யப் போகிறாள்.. இன்று இரவு 07:30 மணிக்கு. காணத் தவறாதீர்கள்!).
மற்ற அனைவருமே பரஸ்பரம் சண்டை போடுவதை பெரும்பாலும் நிறுத்தி சமாதானம் ஆகி விட்டார்கள். ஆனால் தினேஷ் – விசித்ரா மட்டும்தான் இன்னமும் சண்டை ‘கன்டென்ட்’ தருவதில் ஆவேசமாக நீடிக்கிறார்கள். சின்ன வீட்டுக்கு யார் செல்வது என்பதில் ஆரம்பித்த விவாதம், இப்போது இன்னமும் அதிகமாக சென்றது. “இந்த சுகர் விஷயத்தை இன்னமும் எத்தனை நாளைக்கு இழுக்கப் போறீ்ங்க?” என்றார் விசித்ரா.
அது சர்க்கரை ஒளித்து வைத்து விளையாடிய விஷயமோ என்று பார்த்தால் இல்லை. கோப்பையில் வைத்திருந்த சர்க்கரையில் கரப்பான்பூச்சி இருந்த சமாச்சாரம். (அல்லது எறும்போ?!) “நீங்க மட்டும் ஈ மொய்ச்ச தயிரை சாப்பிடலையா. அப்ப மட்டும் சுத்தம் எங்க போச்சு?” என்று பதிலடி தந்தார் தினேஷ். கரப்பான்பூச்சி, எறும்பு, ஈ.. என்று வரிசையாக இன்னும் என்னென்னமோ ஜீவராசிகள் வரப் போகிறதோ? தலையில் ‘கொசு’ கட்டியிருந்த சுரேஷூம் வெளியேறி விட்டார்.
“உங்க வீட்ல அப்படி இருப்பீங்களா” என்று விசித்ரா ஆரம்பிக்க “என்ன பர்சனல் அட்டாக்கா?” என்று வெகுண்டு எழுந்த தினேஷ் விசித்ரா வீட்டைப் பிடித்து வம்பிற்கு இழுத்தார்.
ஓட்டுக்களை சிதற விட்ட நாமினேஷன்
“இரண்டு நபர்களை நாமினேட் செய்யணும். ஓப்பன் இல்ல. க்ளோஸ்தான். ஆனா காரணங்கள் ஓப்பனா இருக்கணும்” என்று வார்த்தை விளையாட்டுடன் இந்தச் சடங்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். முதலில் சென்ற மாயா “இது டிவில மத்தவங்களுக்கு தெரியுமா” என்று முன்ஜாக்கிரதையாக கேட்டுக் கொண்டார். இந்த நாமினேஷனில் ரவீனாவின் பெயர் அதிகம் சொல்லப்படும் என்பது எதிர்பார்த்ததே. “என் மாமன் மட்டும்தேன் கண்ணுக்கு தெரியறாரு’ என்கிற மாதிரி அவர் மணிக்காகவே ஆடுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் கரன்சி விவகாரத்தில் அது வெட்ட வெளிச்சமாக ஆகி விட்டது.
தினேஷ் குரூப், விக்ரமை டார்கெட் செய்யும் என்பதும் எதிர்பார்த்ததுதான். மாயா குழுவுடன் ஒட்டிக் கொண்டு எப்படியோ தப்பித்து விடுகிறார் என்கிற எரிச்சலில் இருக்கிறார்கள். சொன்னது போலவே இரண்டு ‘வி’களை கவனித்துக் கொண்டார் தினேஷ். விக்ரம் மற்றும் விசித்ராவை அவர் நாமினேட் செய்தார். தங்களைப் பற்றி குறை சொன்னதால் மாயாவும் பூர்ணிமாவும் விசித்ராவை நாமினேட் செய்தார்கள். “இத்தனை வாரம் ஸ்ட்ராட்டஜியா பண்ணேன். இது நேர்மையான நாமினேஷன்” என்று சொன்ன விஷ்ணு, மாயா மற்றும் விசித்ராவை நாமினேட் செய்தார். (பூர்ணிமாவை சாய்ஸில் விட்டு விட்டார்).
ஆக இந்த வார நாமினேஷனில் வந்தவர்கள் மூன்றே நபர்கள்தான். ரவீனா (5), விக்ரம் (4), மற்றும் விசித்ரா (3). நாமினேஷன் பற்றி விவாதிக்கக்கூடாது என்று கமல் கடுமையாக எச்சரித்ததின் விளைவு, ஓட்டுக்கள் சிதறி விட்டது போல. “என்னது. வெறும் மூணே பேர்தானா, எனக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு சொன்னியே.. இந்த வாரம் தெரிஞ்சுடும்” என்று மணியிடம் காமெடி செய்தார் விக்ரம். என்றாலும் உள்ளுக்குள் அவர் அதிர்ச்சியடைந்திருப்பது தெரிந்தது.
‘அந்தக் குழந்தையே விஷ்ணுதான்’ – நிக்சன் காமெடி
‘அம்மா அப்பா வருவாங்க.. பேசுவாங்க’ என்று விஷ்ணு சொன்னதைப் பற்றி மாயா மற்றும் நிக்சனிடம் ஜாலியாக பகிர்ந்து கொண்டார் பூர்ணிமா. “அவருக்கு உங்க மேல நிச்சயமா ஒண்ணு இருக்கு. அதீத அன்பு இருக்கு. அதுவும் வன்முறைதான். அது லவ்லாம் இல்லை. ஆனா உங்களை பர்சனலா ரொம்ப கேர் எடுத்துக்கறாரு. அவரு கண்ணை உத்துப் பார்த்தாலே தெரியும்” என்று நிக்சன் சொல்ல, காமிரா விஷ்ணுவின் கண்களுக்கு ஜூம் செய்து காட்டியது. (உலகமே இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது!).
“அவருக்கு ஏன் பிடிக்குதுன்னு தெரியல. தன்னை வெளிப்படுத்திக்க தெரியல. ஆனா அவ வந்து பேசினா சரியாயிடுவேன்.. ஏழு நாள்ல லவ் வர்றதுல்லாம் சும்மா” என்று இதை துண்டித்து பேசினார் மாயா. “அவர் சுயநலவாதி. அது மட்டும் தெரியும்” என்று பூர்ணிமா சொல்ல “குழந்தைங்க அப்படித்தான் இருக்கும். தனக்கு வேணும்ன்றதுல பிடிவாதமா இருக்கும். ஆனா ரொம்ப நல்ல மனுசன்” என்று சர்காஸ்டிக்காக சொன்னார் நிக்சன். “சுயநலம்ன்றதுல குழந்தை. ஆனா அப்பாவிக் குழந்தையில்லை” என்றார் மாயா.
விஷ்ணுவின் மீது ஒருவிதமான ‘லவ் & ஹேட்’ அணுகுமுறையில் பூர்ணிமா இருக்கிறார். மாயாவிற்கோ விஷ்ணு மீது சுத்தமாக நம்பிக்கையில்லை. நிக்சனா இது ‘பிக் பாஸ் விளையாட்டிற்கான காதல் மட்டுமே’ என்று நம்புவதாக தெரிகிறது. இந்த மாதிரி எத்தனை ரொமான்ஸ் டிராக்குகளை இந்த வீட்டில் பார்த்திருப்போம்!
ஷாப்பிங் டாஸ்க் ஆரம்பித்தது. ‘ஒருவர் மட்டுமே ஷாப்பிங்’ செல்ல முடியும் என்று கடந்த வாரத்தில் சொல்லப்பட்டிருந்ததால் என்னவாகுமோ என்றிருந்தது. ஒன்றுமே ஆகவில்லை. மாறாக வீட்டாருக்கு சாதமாகத்தான் எல்லாமே முடிந்தது. ‘அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படும். லக்ஸரி பொருட்களை மட்டும் போர்டில் எழுதி வாங்க வேண்டும்’ என்று பழைய ஃபார்மட்டை கொண்டு வந்தார் பிக் பாஸ். ஏறத்தாழ ஒரு மினி சூப்பர் மார்கெட்டே ஸ்டோர் ரூம் வழியாக வந்தது. விஜய் திறமையாகச் செயல்பட்டு போர்டில் எழுதியதால் லக்ஸரி பொருட்களும் வந்தன. ஆக இந்த வாரம் உணவுத்தட்டுப்பாடு இருக்காது.
இந்த வாரத்தில் யாரும் கேப்டன் இல்லை என்பதால் ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்கிற பழமொழி மாதிரி ஆளாளுக்கு பஞ்சாயத்து செய்ய விரும்புவார்கள். கலகம் பெருகும். அதுதானே பிக் பாஸிற்கும் வேண்டும்?!