தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்த இவர், கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர் மனைவி நித்யா (39), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி அரிவாளால் தன் மனைவி நித்யாவின் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டினார். பின்னர் அரிவாளுடன் வெளியே வந்த சுந்தர் கணேஷ், காரை எடுத்து கொண்டு வேகமாக சென்றார். பரிசுத்தம் நகரில் உள்ள பால் கடைக்கு சென்றவர், பால் கடை உரிமையாளர்களான தாமரைச்செல்வன், கோபி ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு, காரில் தப்பி சென்றார்.
இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காரில் தப்பித்து திருச்சி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, செங்கிப்பட்டி அருகே டாரஸ் லாரியில் மோதியதில், சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் வெட்டிய பால் கடைக்காரர்களில் ஒருவரான கோபி என்பவரும் உயிரிழந்தார். நித்யா தனியார் மருத்துவமனையிலும், பால்கடையைச் சேர்ந்த மற்றொருவரான தமாரைசெல்வன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது நிலமை கவலைகிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
சுந்தர் கணேஷ் மனைவி மற்றும் பால்கடைக்காரர்களை எதற்காக வெட்டினார் என்பது தற்போது வரை பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. நித்யாவும், தாமரைச்செல்வனும் ஐ.சி.யூ வார்டில் இருப்பதால், எதற்காக இந்தச் சம்பவம் நடந்தது என்பது முழுமையாகத் தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், இந்த விவகாரத்தில் நடந்து என்ன என்பதை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விபரமறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். “வேலையை விட்டு நின்ற பிறகு செல்போனில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடத் தொடங்கிய சுந்தர் கணேஷ், அதில் பணத்தை பெரிய அளவில் இழந்துவிட்டார். மனைவி நித்யாவிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் வாங்கியும் விளையாடியதால், சுந்தர் கணேஷிற்கு கடன் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் நித்யா தன் அப்பாவின் பண உதவியில் ரூ.58 லட்சத்திற்கு வீடு ஒன்று வாங்கியிருந்தார்.

நித்யாவிடம் பணம் கேட்பதை வழக்கமாக வைத்திருந்த சுந்தர் கணேஷ், பணம் தரவில்லை என்றால் அவரை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இப்படியே சில மாதங்களாக நடந்துள்ளது. ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கடனில் இருந்த சுந்தர் கணேஷ், வீட்டை விற்பனை செய்து பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நித்யா மறுப்பு தெரிவிக்க, அவர்மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் வீட்டை விற்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
அப்போது பால்கடை வைத்திருப்பவர்களிடம் வீடு விற்பனை செய்வது தொடர்பாக சொல்லியிருக்கிறேன் என நித்யா கூறியுள்ளார். பால்கடையினர் ஏற்கெனவே சுந்தர் கணேஷிற்கும் அறிமுகமானவர்கள் என்பதால், அவருக்கு அட்வைஸ் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவம் நடப்பதற்கு முன்பு, மூன்று தினங்கள் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் சுந்தர் கணேஷ். இந்த நிலையில்தான் நித்யா, தாமரைச்செல்வன், கோபி ஆகிய மூன்று பேரையும் வெட்டியிருக்கிறார்.

தாமரைச்செல்வன், கோபி ஆகிய இருவருக்கும் திருவையாறு அருகே உள்ள கீழத்திருப்பூந்துருத்தி கிராமம்தான் சொந்த ஊர். இருவரும் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். தான் உண்டு வேலை உண்டு என பொறுப்பாக இருப்பவர்கள். பல வருடங்களாக அந்த இடத்தில் பால்கடை நடத்தி வந்தும் அவர்களால் எந்த சிறு பிரச்னையும் நடந்தது கிடையாது. இதைவிட கொடுமை உயிரிழந்த கோபி, வீட்டுக்கு ஒரே மகன். அவர் தலையெடுத்து சம்பாதித்த பணத்தில் தங்கைக்கு திருமணம் செய்துவைத்தார். சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பது அவருடைய பெரும் கனவு. ஆசையாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். தற்போது வீட்டு வேலை பாதியில் நிற்கிறது. கோபி இல்லாமல் அந்த குடும்பம் இனி எப்படி மீண்டு வரப்போகிறது என தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட குற்றவாளி இறந்துவிட்டதால், இனி இந்த வழக்கு நமத்து போய் விடும் என பேசப்படுகிறது. போலீஸாரும் விசாரணையில் தீவிரம் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் ஒரு பாவமும் அறியாத ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. இதை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு இருக்கிறது. எனவே வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருக்கும் நித்யா, தாமரைச்செல்வன் ஆகிய இருவரும் பேசத்தொடங்கினால், முழு விவரமும் தெரியவரும்” என்றனர்.