சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று இந்த நிறுவனத்தில் பைப் ஒன்றில் எண்ணெய் கசிவு ஏற்பட, அதன் காரணமாக தீ பிடித்து பாய்லர் வெடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பெருமாள் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஊழியர்கள் சரவணன் மற்றும் பன்னீர் செல்வம் உட்பட சிலர் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
லூப் பாயிண்ட் எனப்படும் பாய்லருக்கு செல்லும் பைப் லைனில் எண்ணெய் கசிவே பாய்லர் வெடித்ததற்கான காரணம் எனத் தெரிகிறது. பாய்லர் வெடித்ததும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்தால் பற்றியுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். வெடிவிபத்தின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் நிறுவனத்தின் முன்பு திரண்டுள்ளனர்.