புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது என மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சில விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
“என்னால் இந்த தற்காலிக குழுவை ஏற்க முடியாது. ஏனெனில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தன்னாட்சி அமைப்பாகும். அதனால் எனது அனுமதியின்றி இது போன்ற முடிவை எடுக்க முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் நான் பேசுவேன். இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடருவேன். நான் தலைவராக நியமிக்கப்படவில்லை ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றேன்” என சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்த நிலையில், அந்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிக்க தற்காலிக குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்தத் குழுவின் தலைவராக பூபேந்திர சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எம்.சவுமியா, மஞ்சுஷா தன்வார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
முன்னதாக, வீரர்களின் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் பல முறை தள்ளிப்போன இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிச.21-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பெரும்பாலான நிர்வாக பதவிகளில் பிரிஜ் பூஷண் அணியினரே வெற்றி பெற்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாத் ஆகியோரும் ஆதரவு கொடுத்தனர்.