பாட்னா, பீஹாரில் ஆறு மாதமாக பணிக்கு வராமல் இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், ௧௩,௦௦௦ பேரின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆறு மாதங்களாக அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனைகளின் போது, முன் அனுமதியின்றி, 12,987 ஆசிரியர்கள் ஆறு மாதங்களாக பள்ளிகளுக்கு வராததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
பீஹார் மாநில கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், ‘கடந்த 23ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக, 131 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
‘பீஹார் ஆசிரியர் வாரியத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 13 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்; 39 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.
அதேநேரத்தில், கல்வித்துறையின் நடவடிக்கை குறித்து, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த 26ம் தேதி, பீஹார் மாநில தலைமை செயலருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘சமீபகாலமாக அரசியல் சாசனத்திற்கு எதிராக கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவுகளை, உடனே சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், மாநிலத்தின் கல்விச்சூழல் பாதிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement