Adani Group case to be investigated by SEBI: Supreme Court Verdict | அதானி குழும வழக்கை செபி அமைப்பே விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி; அதானி குழுமம் ஹிண்டன்பர்க் நிறுவனம் தொடர்பான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே (செபி) விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி (61) உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஆராய்ச்சியில் புகழ் பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி., எனும் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை வைத்தது.

இந்த செய்தி வெளியானவுடன் அதானி நிறுவன பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு இன்று (ஜன.,3) வழங்கிய தீர்ப்பில், ‘அதானி குழுமத்தின் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி) இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை.

விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. 22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது. எனவே, இந்த வழக்கை செபியே விசாரிக்கும். மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என தீர்ப்பளிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.