Mizoram insists on sending back Myanmar soldiers who took refuge | தஞ்சமடைந்த மியான்மர் வீரர்களை திருப்பி அனுப்ப மிசோரம் வலியுறுத்தல்

குவஹாத்தி, உள்நாட்டு போரால் நம் நாட்டில் தஞ்சமடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேரை உடனடியாக திருப்பி அனுப்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மிசோரம் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில் 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

போராட்டம்

இதைத் தொடர்ந்து, அங்குள்ள ஆயுதம் ஏந்திய பழங்குடியின அமைப்புகள் இணைந்து, ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இரு தரப்பினருக்கும் கடந்த நான்கு மாதங்களாக தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான எல்லை பகுதியை, ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுவினர் கைப்பற்றி வருகின்றனர்.

இதனால், அங்கிருந்து தப்பிய ராணுவ வீரர்கள், எல்லையை ஒட்டி அமைந்துள்ள நம் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவ்வப்போது வருபவர்களை வீரர்கள் உடனடியாக திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மியான்மரின் ரக்கினே மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளனர்.

மிசோரமின் லாங்திலாய் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ள அவர்கள், அசாம் ரைபிள்ஸ் படையினர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல வீரர்கள் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்து மத்திய அரசுக்கு மிசோரம் அரசு தகவல் அளித்துள்ளது. தஞ்சமடைந்த மியான்மர் வீரர்களை உடனடியாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை மத்திய அரசு உறுதிப்படுத்தும்படி மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

நடவடிக்கை

இதையடுத்து, ஷில்லாங்கில் நடந்த வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின்போது, மிசோரம் முதல்வர் லால்துஹோமா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இது குறித்து லால்துஹோமா கூறியதாவது:

மியான்மரில் இருந்து மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள், நம் நாட்டிற்கு தஞ்சம் தேடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம்.

தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வீரர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 450 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைக்க நடவடிக்கை’

வடகிழக்கு மாநிலமான அசாமில், மாநில போலீஸ் கமாண்டோ பட்டாலியனின் முதல் பிரிவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:வங்கதேச எல்லை போல் இந்தியா – மியான்மர் எல்லையும் பாதுகாக்கப்படும். மியான்மரில் இருந்து விசா உள்ளிட்ட எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நம் நாட்டு எல்லைக்குள் யாராவது ஊடுருவினால், அந்த முயற்சி மத்திய அரசால் தடுத்து நிறுத்தப்படும். இரு நாட்டு எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.