கோவை: மத்திய அரசு வழங்கிய, பத்மஸ்ரீ விருது கிராமிய கலைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர் பத்ரப்பன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலைஞரான பத்ரப்பன் (87) என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலையை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க பாடுபட்டு வருவதை ஊக்கப்படுத்தியும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு கற்றுத் தருவதையும், பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. பத்ரப்பனுக்கு மனைவி, மகன், மகள் இருந்தனர். மனைவி, மகன் உடல்நலக்குறைவால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டனர். தற்போது மகள் வீட்டில் பத்ரப்பன் வசித்து வருகிறார்.
இதுதொடர்பாக நாட்டுப்புற நடனக் கலைஞர் பத்ரப்பன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கிராமிய நடனக் கலைஞரான எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சிறு வயதில் இருந்தே எனக்கு கிராமிய கலைகள் மீது ஆர்வம் அதிகம். நான் கடந்த 60 வருடங்களாக வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலையை எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், இக்கலையை ஆர்வத்துடன் கற்றுக் கொடுத்து வருகிறேன். இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் என்னிடம் இந்த நாட்டுப்புற நடனக் கலையை கற்றுச் சென்றுள்ளனர். அவர்கள் இன்று பல்வேறு இடங்களில் பயிற்சியளித்து வருகின்றனர். பாரம்பரிய கலைகளுக்கு முன்னோடியாக வள்ளி-கும்மி கலை உள்ளது. இதன் மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். கிராமிய கலைகளை ஊக்குவிக்க அரசு இதுபோன்ற விருதுகளை அறிவித்து அளித்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. ஒரு புறம் குறு விவசாயியாக நான் இருந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் நாட்டுப்புற நடனக் கலைகளை என்னிடம் வருபவர்களுக்கு கற்றுக் கொடுத்தும், நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறேன்.
நாட்டுப்புறக் கலைகள் மீது மக்களுக்கு ஆர்வமும், வரவேற்பும் உள்ளது. வள்ளி கும்மி ஆட்டம் நாட்டுப்புற நடனக் கலைகள் மக்களிடம் சென்றடைய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை, நாட்டுப்புறக் கலைகள் குறித்து பயிற்சி வகுப்புகளை, பிரத்யேக பயிற்சியாளரை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கற்றுத் தர வேண்டும். தொலைக்காட்சிகளில் தினமும் ஒரு மணி நேரம் நாட்டுப்புறக் கலைகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கிராமிய கலைகள் இம்மண்ணுக்கு எப்பொழுதும் சேவை செய்யும். அவற்றை பாதுகாக்க வேண்டும். வருடத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் என்னிடம் வந்து வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலைகளை ஆர்வத்துடன் கற்றுச் செல்கின்றனர். இக்கலையை படிப்படியாக கற்றுத் தேர குறிப்பிட்ட மாதங்கள் ஆகும். இக்கலையை கற்பதற்கு என கால நிர்ணயம் எதுவும் இல்லை.
முதலில் வள்ளி கும்மி ஆட்ட கலையை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர், பண்ணாங்கு எனப்படும் பாட்டின் தாளக்கட்டை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிந்தால் தான் எவ்வளவு கால் அசைவுகள் வைக்க வேண்டும் என்பது சரியாக புலப்படும். தொடர்ந்து ஆட்டத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் இந்த கிராமிய கலையை நான் ஆர்வத்துடன் என்னிடம் வருபவர்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்