சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்து, முப்படையினர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாநடைபெற்றது. முதலில், காலை 7.52 மணிக்கு சென்னை போக்குவரத்து காவலர்களின் புல்லட் அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின், வாலாஜா சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் புல்லட் அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை முதல்வர் வரவேற்றார்.
ஆளுநருக்கு முப்படை அதிகாரிகள், கடலோர காவல் படை, தமிழக காவல், சென்னை காவல் அதிகாரிகளை தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, உழைப்பாளர் சிலை பகுதியில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றிவைத்தார். தேசிய கீதம் இசைக்க, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பூ தூவப்பட்டது. ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், விங் கமாண்டர் விகாஷ் ஷா தலைமையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். ராணுவம், கடற்படை, ராணுவ கூட்டு குழல் இசை பிரிவு, வான்படை, கடலோர காவல் படைவீரர்களின் அணிவகுப்பை தொடர்ந்து, அந்த படைப் பிரிவுகளின் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது. பிறகு, முன்னாள் ராணுவத்தினர், சிஆர்பிஎஃப், சிஆர்பிஎஃப் கூட்டுக்குழல் பிரிவு, சிஐஎஸ்எஃப், ஆர்பிஎஃப் ஆகிய படைப் பிரிவினர் அணிவகுத்தனர்.
பிறகு, உதவி கமாண்டர் எஸ்.அசோகன் தலைமையில் தமிழக காவல் துறையை சேர்ந்த சிறப்பு காவல் பெண்கள் படை, ஆயுதப்படை, பேரிடர் நிவாரண பிரிவு, கடலோர பாதுகாப்பு குழு, சென்னை பெருநகர காவல், சிறப்புபடை கமாண்டோ, நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை, வனத்துறை, சிறைப்படை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, சாலை பாதுகாப்பு சுற்றுக்காவல், தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்டம்என பல்வேறு பிரிவிரின் அணிவகுப்பு மற்றும் கூட்டு குழல் முரசுஇசை அணிவகுப்பு மற்றும் ஜேஎச்ஏஅகர்சன் கல்லூரி மாணவர்கள், குட் ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி கூட்டு குழல் முரசு இசை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய ஏற்பாட்டில், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லாய் ஹரோபா நடனம், கர்நாடக சித்தி பழங்குடியினரின் நடனம் ஆகியவற்றை அம்மாநில கலைஞர்கள் நிகழ்த்தினர். செய்தித் துறைசார்பில், மதுரையில் உள்ள தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்தினர் கைசிலம்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.
22 அலங்கார வாகனங்கள்: இதையடுத்து, செய்தித் துறையின் 2 வாகனங்கள், காவல், விளையாட்டு, கூட்டுறவு, உணவு, ஊரகவளர்ச்சி, வேளாண்மை, பள்ளிக்கல்வி, சுகாதாரம், கைத்தறி, ஆதிதிராவிடர் – பழங்குடியினர், சுற்றுலா,சமூகநலம், கால்நடை, பொது தேர்தல்கள், தகவல் தொழில்நுட்பம், வீட்டுவசதி, வனம், இந்து சமய அறநிலையங்கள், மீன்வளம், தீயணைப்பு ஆகிய துறைகளின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
விழாவில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டிஜிபி சங்கர் ஜிவால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு நின்று நேரிலும், டிஜிட்டல் திரைகள் மூலமாகவும் விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். ஆளுநரும், முதல்வரும் விழாவுக்கு வந்தபோதும், புறப்பட்டு சென்றபோதும், பொதுமக்களை நோக்கி கையசைத்து, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
‘பன்மைத்துவம், சமத்துவம், ஒற்றுமையில் உறுதி கொள்வோம்’ – முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘இந்தியாவின் அடையாளமான பன்மைத்துவம், சமத்துவம், ஒற்றுமை மீதான நமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வோம். இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய நோக்கை தழுவி பிரிவினை கொள்கைகளை தகர்த்தெறியட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மக்களுடன் அமர்ந்த அமைச்சர்: அமைச்சர் கீதா ஜீவன் தாமதமாக வந்ததால், அவரது வாகனம் உள்ளே வர முடியவில்லை. இதனால், பொதுமக்கள் பகுதியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
ராணுவ கவச வாகனங்கள்: ராணுவத்தின் ‘எல்எஸ்வி’ எனப்படும் இலகு சிறப்பு வாகனம் மற்றும் அஜயா பீரங்கியுடன் கூடிய கவச வாகனம் அணிவகுப்பில் இடம்பெற்றன. விழாவில் பொதுவாக, அண்டை மாநில காவல் பிரிவினரின் அணிவகுப்பும் இடம்பெறும். இந்த முறை ஆந்திராவின் சிறப்பு காவல் ஆண்கள் படைப்பிரிவு உதவி ஆணையர் பிஎன்டி பிரசாத் தலைமையிலான படைப்பிரிவினர் பங்கேற்றனர்.