அமெரிக்காவுக்கான பயண தடை பட்டியலில் பாகிஸ்தான், ரஷியா உள்பட 43 நாடுகள்

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான புதிய அரசின் நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 43 குடிமகன்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு தடையை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட வரைவு பட்டியல் ஒன்றானது, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என நாடுகளை மூன்று பிரிவாக பிரிக்கிறது. அதன்படி, இந்த பயண தடைக்கான நாடுகள் பட்டியலிடப்படும்.

ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன. இந்நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்படும்.

ஆரஞ்சு பட்டியலில் உள்ள நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் மற்றும் ரஷியா இடம் பெற்றுள்ளன. மியான்மர், பெலாரஸ், ஹைதி, லாவோஸ், எரித்ரியா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன.

இதனால், வர்த்தக பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். ஆனால், புலம்பெயர்வோர் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான விசா விண்ணப்பிப்போர் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த பட்டியலில் உள்ள நபர்கள், விசா பெற தனிநபர் நேர்காணல்களை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.

இதுதவிரவும், அங்கோலா, காங்கோ, வனுவாட்டு, காம்பியா, செயின்ட் லூசியா உள்ளிட்ட 22 நாடுகள் மஞ்சள் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் தரப்படும். அதற்குள் முறையாக அமெரிக்க விதிகளுக்கு உட்படாவிட்டால், பிற பட்டியல்களுக்கு அவை செல்ல கூடிய அச்சுறுத்தலும் உள்ளன. சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்படும்.

டிரம்ப் அவருடைய முதல் பதவி காலத்தின்போது, ஈரான், ஈராக் மற்றும் சூடான் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளுக்கு பயண தடைகளை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்த பயண தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.