புதுடெல்லி: வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும்விதமாக சசி தரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த 7 குழுக்களில் 59 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 51 பேர்எம்பிக்கள், ஆவர். 8 பேர் வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆவர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 31 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் 7 குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழுவில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த எம்பி யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழு இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
தன்னிச்சையாக… இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று கூறும்போது, “வெளிநாடுகள் செல்லும் எம்பிக்கள் குழு தொடர்பாக மத்திய அரசு எங்கள் கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தவில்லை. தன்னிச்சையாக குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. நாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை மட்டுமே எம்பிக்கள் குழுக்களில் சேர்த்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எம்பிக்கள் குழுவில் இருந்து யூசுப் பதான் விலகிவிட்டார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் முடிவால் திரிணமூல் எம்பி யூசுப் பதான் எம்பிக்கள் குழுவில்இருந்து விலகி உள்ளார். இது துரதிஷ்டவசமானது. எம்பிக்கள்குழுக்களின் வெளிநாட்டு பயணம் நாட்டின் நலன் சார்ந்தது, அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.