20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

விபத்தில் சிக்கியதால் 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வலீத் பின் காலித் காலமானார். அவருக்கு வயது 36.

2005ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ அகாடமியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கினார் இளவரசர் அல்வலீத். அப்போது முதல் அவர் கோமாவில் இருந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை குணப்படுத்த இயலவில்லை. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையிலேயே சுயநினைவின்றி இருந்து வந்தார்.

மருத்துவர்கள் கைவிரித்தாலும் இத்தனை ஆண்டுகளாக இளவரசர் காலித் தனது மகனை குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. தொடர்ந்து மகனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இஸ்லாமிய நிகழ்வுகளின் போது தனது மகன் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்தும் வந்தார்.

2005ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இளவரசர் அல்வலீத் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரத்திற்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்து வந்தார். அவரை மீண்டும் காப்பாற்றும் நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் உலகம் முழுவதிலுமிருந்து மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்தனர். அவ்வப்போது நம்பிக்கை அளிக்கும் அசைவுகள் தென்பட்டாலும், பல ஆண்டுகளாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த வந்த அல்வலீத் பின் காலித் தனது 36-வது வயதில் உயிரிழந்ததாக அவரது தந்தையும் இளவரசருமான கலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.