கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில் உயர்நீதிமன்றம் அக். 3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது.
அக். 5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்.13-ம் தேதி இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து அக். 16-ம் தேதி கரூர் வந்த சிஐபியினரிடம் அக். 17-ம் தேதி எஸ்ஐடி வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தது.
இதையடுத்து அக். 18-ம் தேதி சிபிஐ, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர். அக். 19-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐஏஎஸ் அதிகாரி பிரவீண்குமார், ஏஎஸ்பி முகேஷ்குமார் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற நிலையில் சிபிஐ இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட 3 பேர் கரூர் சுற்றுலா மாளிகையில் தொடர்ந்து தங்கி எஸ்ஐடி அளித்த ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர்.
தொடர்ந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல்பர்ட்டிடம், சிபிஐ இன்ஸ்பெக்டர் மனோகரன் அக். 22-ம் தேதி சிபிஐ எப்ஐஆர் அடங்கிய சீலிடப்பட்ட உறையை ஒப்படைத்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் விடுப்பில் இருந்ததால், என்பதால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் அக். 25-ம் தேதி தவெக சிபிஐ எப்ஐஆர் நகலை கேட்டு விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு நகல் வழங்கப்பட்டது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த சிபிஐ அதிகாரிகள் 2 கார்களில் கரூர் சுற்றுலா மாளிகைக்கு திரும்பினர். கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆவணங்களுடன் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரரானார்.
அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 41 பேர் உயிரிழந்த வேலுசாமிபுரம் கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (அக். 31ம் தேதி) காலை சுமார் 10.30 மணிக்கு கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்ட சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தை பார்வையிட்டனர். எஸ்.பி. பிரவீண்குமார், ஏஎஸ்பி முகேஷ்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் உடனிருந்தனர். கரூர் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விசாரணை நடத்திய 4 பேர் கோட் அணிந்திருந்தனர். அதன் பின்பகுதியில் சிபிஐ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. விசாரணையின்போது ஃபோட்டோ கேமரா, வீடியோ கேமரா, டிரைபேடுகள், சிடி ஸ்கேனர் கருவி ஆகியவை பயன்படுத்தப்பட்டன. முன்னதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்த போட்டோ, வீடியோகிராபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயினர் விசாரணை மேற்கொண்டனர்.