வட கிழக்கு மாநிலங்களுக்காக விரைவில் தனித்த ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, பிரத்யோத் மாணிக்யா, கிகோன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேகாலயாவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் முதல்வருமான கான்ராட் சங்மா, திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியான திப்ரா மோதா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்யா, நாகாலாந்து மாநில பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் எம்.கிகோன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கான்ராட் சங்மா, வட கிழக்குக்கான ஒரு தனித்துவமான புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நாங்கள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு தனது அறிக்கையை 45 நாட்களுக்குள் அளிக்கும்.
எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் போராட நாங்கள் இங்கு வரவில்லை. எங்கள் முதன்மை கவனம் வட கிழக்கு மக்கள் மீதுதான். வட கிழக்கு மக்களுக்கு ஒரே அரசியல் தளத்தை வழங்குவதே இதன் நோக்கம். இதற்காக மற்ற அரசியல் கட்சிகளை அணுகுவதே இக்குழுவின் கடமை.
பழங்குடி மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பது எங்கள் முதன்மையான குறிக்கோள். எங்கள் கட்சிகள் ஒன்றிணைந்து சியான நேரத்தில் ஒரு அரசியல் அமைப்பாக மாறும் என தெரிவித்தார்.
பிரத்யோத் மாணிக்யா பேசும்போது, நாங்கள் எங்கள் மக்களுக்காக உறுதியுடனும் உண்மையுடனும் பேச விரும்புகிறோம். எங்களுக்குள் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், நாங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட விரும்பவில்லை. நாங்கள் யாருடனும் சண்டையிட வரவில்லை. அதேநேரத்தில் எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம் என தெரிவித்தார்.