அகமதாபாத்: நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைதீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சின் பார்மர் கண்காணிப்பில், ஏடிஎஸ் இன்ஸ்பெக்டர் நிகில் பிரம்பத், சப் இன்ஸ்பெக்டர் ஏ.ஆர்.சவுத்ரி ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களது நடவடிக்கைகள் கடந்த ஓராண்டாக கண்காணிக்கப்பட்டன. அப்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் 3 பேர் தொடர்பு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ளும்போது ஏடிஎஸ் படையினர் கைது செய்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எந்தெந்த இடங்களை அவர்கள் தேர்வு செய்தனர், எப்படிப்பட்ட தாக்குதலை நடத்ததிட்டமிட்டிருந்தனர் என்பது போன்ற விவரங்களை சேகரிக்க, 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை 22-ம் தேதி அல் கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த பர்தின் ஷேக், சைபுல்லா குரேஷி, முகமது பாய்க், ஜீஷான் அலி ஆகிய 4 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர். ஷாமா பர்வீன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் ஆன்லைனில் பிரச்சாரம் செய்ததும், அல் கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்க வலை
விரித்ததும் உறுதி செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து பிஸ்டல், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தியாவில் அமைதியை சீர்குலைப்பது, அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டுவது, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவது போன்ற சதி திட்டங்களை இவர்கள் தீட்டியுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.