சஞ்சு சாம்சனை மகிழ்ச்சியோடு வாழ்த்தி வரவேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலகில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையேயான ஒரு பரபரப்பான வீரர் பரிமாற்ற ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே அணியின் தூண்களில் ஒருவராகக் கருதப்படும் ரவீந்திர ஜடேஜா வெளியேறவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டருமான சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வரவேற்கவும் தயாராகி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரனும் ஒரு பகுதியாக இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

ஒப்பந்தத்தின் நிலை: 48 மணி நேரக் கெடு

கிரிக்பஸ் (Cricbuzz) அறிக்கையின்படி, இந்த மாபெரும் முத்தரப்பு ஒப்பந்தம் தற்போது IPL வீரர் விதிமுறைகளின் கீழ் உள்ள ‘விருப்பத்தை வெளிப்படுத்தும் நிலை’ (Expression of Interest – EOI) என்ற நிலையை அடைந்துள்ளது. அதாவது, ஒப்பந்தத்தை முறைப்படி உறுதிப்படுத்துவதற்கான கட்டாயமான 48 மணி நேர காலக்கெடு தொடங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக இந்த ஒப்பந்தம் காத்திருக்கிறது.

வீரர்களின் ஒப்புதல் உறுதியானது

சிஎஸ்கே மற்றும் ஆர்.ஆர். ஆகிய இரண்டு அணிகளும் ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மூன்று வீரர்களான ஜடேஜா, சாம்சன் மற்றும் கரன் ஆகியோரின் சம்மதத்தைப் பெற்றுவிட்டன. “மூன்று பேரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுவிட்டனர்,” என்று ஒரு பிரான்சைஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், திங்கள் மாலை வரை, இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஐபிஎல் அல்லது பிசிசிஐ தலைவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தங்கள் கவனத்துக்கு வரவில்லை என்றும் பிசிசிஐயின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஏன் இந்த மாபெரும் பரிமாற்றம்?

ரவீந்திர ஜடேஜா (CSK) மற்றும் சஞ்சு சாம்சன் (RR) இருவரும் தங்கள் அணிகளால் ரூ. 18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட வீரர்கள். சாம் கரன், கடந்த மெகா ஏலத்தில் ரூ. 2.4 கோடிக்கு வாங்கப்பட்டவர். ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் சிஎஸ்கேவிடம் இருந்து டெவால்ட் பிரெவிஸ் அல்லது மதீஷா பத்திரனா ஆகியோரில் ஒருவரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெயர்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், ஜடேஜாவுடன் சேர்த்து, சாம் கரனையும் பரிமாற்றமாக கொடுக்க முன்வர இந்த ஒப்பந்தம் இறுதியானது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சாம்சனை சிஎஸ்கே பெறுவதன் மூலம், வருங்கால கேப்டன் ஒருவரைத் தயார் செய்வதுடன், விக்கெட் கீப்பர்-பேட்டிங் வரிசையையும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், ஆர்.ஆர். அணிக்கு அனுபவமிக்க இந்திய ஆல்-ரவுண்டர் ஜடேஜாவும், ஒரு தரமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் சாம் கரனும் கிடைப்பார்கள்.

ஐபிஎல் விதிமுறைகள் 

ஐபிஎல் வர்த்தக விதிகளின்படி, ஒரு அணி வர்த்தகத்தைத் தொடங்க விரும்பினால், முதலில் பிசிசிஐக்கு EOI-ஐ சமர்ப்பிக்க வேண்டும். பிசிசிஐ, சம்பந்தப்பட்ட அணியுடன் கடிதப் போக்குவரத்து நடத்தி, அந்த அணி 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். தற்போதைய அணி பேச சம்மதித்தால், வீரரின் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு, அதன்பின்னர் சம்பளத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது போன்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து, பிசிசிஐ ஒப்புதல் அளித்த பின்னரே வர்த்தகம் அதிகாரப்பூர்வமாகும்.

சாம் கரனுக்கு சிக்கல்

இதில் சாம் கரன் வெளிநாட்டு வீரர் என்பதால் ஒரு கூடுதல் சவால் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அணி மாறுவதற்கு, ஐபிஎல் விதிகளின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (No Objection Certificate – NOC) தேவைப்படலாம்.

ரெய்னாவின் வேண்டுகோள்

ஜடேஜா சிஎஸ்கேவை விட்டு விலகும் வாய்ப்பு ஐபிஎல் சூழலில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். “ஜடேஜாவை மீண்டும் தக்கவைக்க வேண்டும். அவர் சிஎஸ்கேவுக்கு ஒரு வலுவான வீரர் (gun player). அவர் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்” என்று ரெய்னா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது என்பது மட்டும் உறுதி. இந்த  சூழலில் சாம்சனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.