மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்; போக்சோவில் கைது செய்யப்பட்ட காவலர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவர் சந்தோஷ்குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கயல்விழியும் (இருவரது பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) ஒருவரையொருவர் காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலை வீடு திரும்பாமல் மாயமானார்கள். பதறிப்போன மாணவியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

பாலியல் துன்புறுத்தல்

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாயமான சிறுமி கயல்விழியைத் தேடிவந்தனர். இதற்கிடையில் 6-ம் தேதி அதிகாலை சென்னை – திண்டிவனம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சந்தோஷ்குமாரையும், கயல்விழியையும் நிறுத்திய காவலர் ஒருவர், அவர்களிடம் விசாரணை செய்திருக்கிறார். அப்போது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அப்போது சந்தோஷ்குமாரை மட்டும் வீட்டுக்கு அனுப்பிய காவலர், காவல் நிலையம் செல்லவேண்டும் என்று கூறி மாணவியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிது தூரம் சென்றதும் இருட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்திய இளங்கோ, கயல்விழியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது கயல்விழி சத்தம் போடவே, அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் அந்தக் காவலர். அதையடுத்து காலையில் தன்னுடைய பெற்றோருக்குப் போன் செய்த அந்த மாணவி, காவலர் ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் ரீதியில் கொடுமை செய்ததாக கதறி அழுதிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட காவலர் இளங்கோவன்

அதையடுத்து கயல்விழி சொன்ன இடத்திற்கு சென்று அவரை மீட்ட பெற்றோர், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் இளங்கோ என்பது தெரிய வந்தது. அதையடுத்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் இளங்கோவை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.