வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அன்று மாலை, பூங்கா ஒன்றில் பரமன் அடைந்த அமைதி அலாதியானது. மரங்களின் அசைவில் காற்றில் மிதந்து வந்த அமைதி அது. சற்று நேரத்திற்கு முன் வீட்டில் நடந்த களேபரமும், மனக்கணக்கும் அந்த அமைதியில் கரைந்து போயின.
அவர் மனதில் சில மாதங்களாகவே ஒரு பெரும் சுமை கனத்தது. “கொஞ்சம் யோசிச்சுப் பாரு பார்வதி! நிர்மலா அம்மா ஜிஎஸ்டி-யைக் குறைச்சதுல வீட்டுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?” அவரது குரலில் ஒரு வித வருத்தம் தெரிந்தது.
“போன வருஷம் தான், ஒரு பதினைந்து வருஷப் பழமையான, லொடக்கு ஸ்கூட்டரை மாத்திட்டு, பையன் காலேஜ் போகலைன்னு போர்க்கொடி தூக்கினதால், லட்ச ரூபாய் கொடுத்து ஒரு பைக் வாங்கி குடுத்தேன். தசரா சமயம் பழைய ஃபிரிட்ஜை எக்ஸ்சேன்ஜ் செஞ்சு புதுசு வாங்கினேன். இப்போ குறைச்ச ஜிஎஸ்டி பலனை நம்மால் அடைய முடியலையே! எவ்வளவு நஷ்டம்னு நீயே கணக்குப் போட்டுப் பாரு!”
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பரமன், ‘ஜிஎஸ்டி பலனை மிஸ் செய்து விட்டோம்’ என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார்.
“ஆனாலும், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி காலத்தில் எதையாவது வாங்கிப் போட்டால் தான் மனசு திருப்தி அடையும்னு வீட்டில் நச்சரிப்பு.
GST திரும்ப ஜாஸ்தி பண்றதுக்குள்ள கண்டிப்பா வாங்கணும். வீட்டிற்கு வெளியே எங்கே சென்றாலும், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரும், ‘கிஸ்தி கம்மியாச்சே! என்ன வாங்கினீங்க?’ என்று பயங்கர விசாரிப்பு. ‘வாங்கினால் பார்ட்டி ஸ்வீட்’ என்று வேறு ஆரம்பிப்பார்கள்.” இந்த மாதிரியான விசாரணைகள் தான் அவரை ரொம்பவே இம்சித்தன.

ஒருநாள், அவர் அந்த இம்சையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தார். வீட்டில் மனைவி பார்வதி, பையன் மற்றும் மகள் அமர்ந்திருந்த நேரத்தில், நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் குரலில் ஒருவிதமான கிளர்ச்சி இருந்தது. “பார்வதி, கீர்த்தி, கீர்த்தனா. எல்லாரும் சந்தோஷப்படுங்க. கடைசியில, ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட இந்தக் காலக்கட்டத்தில் நம்ம பழையது ஒண்ணு எக்ஸ்சேஞ்ச் செஞ்சு ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்!”
அவ்வளவு தான்! எல்லோருடைய முகத்திலும் ஒரு மின்னல் வெட்டியது போல பயங்கர சந்தோஷம்.
“அப்பா! நிஜமாவா ?. எப்போ வருது ? SUV தானே? ஹைபிரிட் இல்ல எலெக்ட்ரிக்கா? புது மாடலா ?” என்று மகன் உற்சாகமாகக் கேட்டான்.
“கார் வாங்கினா மொதல்ல ஊட்டி போகணும்” என்று மகள் துள்ளினாள்.
பார்வதி ஆர்வத்துடன் கணவரை நிமிர்ந்து பார்த்தார். “என்ன வித்து என்ன வாங்கினீங்க ? எதுக்கு எக்ஸ்சேஞ்ச் பண்ணீங்க ?. லோன் கீன் எதுவும் போட்டு வாங்காதீங்க. “. நியாமான கவலையை அவள் வெளிப்படுத்தினாள்.
ஆமாம்! வீட்டில் எக்ஸ்சேஞ்ச் பண்ணி வாங்க என்ன இருக்கு? பைக் போன வருஷம் தான் வாங்கினோம். அது விக்க வேண்டாமே என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அவர் தான் சஸ்பென்ஸை விடுவிக்க வேண்டும்.
அவர் ஒரு புன்முறுவலுடன், ஒரு ரகசியத்தை உடைப்பது போலப் பேச ஆரம்பித்தார்.
“என் அப்பா காலத்துல இருந்த ஒரு சைக்கிள், கராஜில் துருப்பிடித்துக் கிடக்குதில்லையா? நல்ல வெயிட் அது… அதை ஒரு 500 ரூபாய்க்கு வித்தேன். அந்தப் பணத்தோடு மிச்சத்தை போட்டு ஒரு புது ஹெர்குலஸ் சைக்கிள் வாங்கிட்டேன். GST முன்னாடி 12 பர்சண்ட் . இப்போ 5 பர்சன்ட். !”
வீடே ஒரு கணம் மயான அமைதியானது.
“மாடல் பேரு ‘ஹேவாக்’. கலர் ஆர்மி கிரீன் . சூப்பரா இருக்கு. அக்கம் பக்கம் காய்கறி, பால்னு எது வாங்கப் போனாலும், அது ரொம்ப வசதியா இருக்கும். முக்கியமா, எக்ஸைஸ் பண்ணின மாதிரியும் ஆச்சுமில்லையா?” என்று அவர் பெருமிதத்துடன் பேசி முடித்தார்.
அவர் பேசி முடித்ததும், எல்லோருக்கும் கொஞ்ச நேரம் மூச்சு உள்ளே போகவில்லை, வெளியே வரவில்லை. மொத்தக் குடும்பமும் ஆழமான மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. ஜிஎஸ்டி சலுகையில் விலையுயர்ந்த கார் வரும் என்று கனவு கண்டிருந்த அவர்கள் முகத்தில் ஏமாற்றமா, அதிர்ச்சியா, அல்லது ஆச்சரியமா என்று எதுவும் தெரியவில்லை.
அவர் மெதுவாக எழுந்து, சாவியை எடுத்து சைக்கிள் நிற்கும் கராஜை நோக்கிச் சென்றார். அவர் முகத்தில் இப்போது ஒரு திருப்தி. ‘தேவையற்ற ஒன்றை விற்று, ஆரோக்கியம் தரும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்து விட்டோம்’ என்ற நிம்மதி அது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.