சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், அக்கூட்டணியின் ஆட்சி பிஹாரில் தொடரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஹார் தேர்தல் முடிவுகள் – இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
பிஹார் தேர்தல் முடிவுகள் ஒரு தனிப்பட்ட கட்சி மற்றும் ஆட்சியின் வெற்றி என்று சொல்வதைவிட இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று குறிப்பிடலாம். யார் முதல்வராக வர வேண்டும் என்பதை விட, யார் முதல்வராக வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை பாஜக கூட்டணிக்கு வழங்கியுள்ளனர். நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சி, பிஹார் மக்களுக்கு தேவை என்பதை இந்த தேர்தல் வெற்றி உணர்த்தியுள்ளது.
அவதூறு பிரச்சாரங்கள், கற்பனையான குற்றச்சாட்டுகள், பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றின் மூலம், அதிகார அரசியலுக்காக, சுயநல, மக்கள் விரோதக் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து ஒரு நாளும் வாக்காளர்களை ஏமாற்ற முடியாது என்பதை பிஹார் தேர்தல் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
மக்கள் நலத் திட்டங்களை, மாநிலத்தின் வளர்ச்சியை, மாநில மக்களின் மகிழ்ச்சியை, அடிப்படை உரிமைகளைப் பேணிக்காத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய கட்சிகளுக்குத் தான் இனி வாக்கு என்கிற சூழ்நிலையை பிஹார் தேர்தல் வலுவாக உணர்த்தி இருக்கிறது.
தேர்தல் அரசியலுக்காக அவதூறு பிரச்சாரங்கள் செய்தாலும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், உண்மை நிலையை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை, இந்த ஜனநாயக வெற்றி மூலம் பிஹார் மக்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் உணர்த்தி இருக்கிறார்கள்.
இது இரட்டை இன்ஜின் அரசுக்கு எடுத்துக்காட்டான வெற்றி. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் அர்த்தமுள்ள வெற்றியாக இந்த வெற்றி இருக்கிறது.
தேர்தல் கமிஷன் நடுநிலைமையோடு போலி வாக்காளர்களை நீக்கி, இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி SIR அமல்படுத்திய போது தேர்தல் கமிஷனருக்கு எதிராகவும்,பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் செய்யப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் தற்போது பிஹார் மக்கள் அளித்துள்ள தேர்தல் வெற்றி மூலம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.