சான்டியாகோ,
11-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் நேற்று தொடங்கியது. வருகிற 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணி என மொத்தம் 8 அணிகள் காலிறுதி சுற்றை எட்டும். இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. ஜெர்மனி, நமிபியா, அயர்லாந்து அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நமிபியாவுடன் நேற்று மோதியது. 10-வது நிமிடத்தில் இருந்து கோல் மழை பொழிந்த இந்திய வீராங்கனைகள் 13-0 என்ற கணக்கில் நமிபியாவை வீழ்த்தியது. சிவாச் கனிகா, பனோ ஹினா தலா 3 கோலும், சாக்ஷி ராணா 2 கோலும் அடித்தனர்.
முன்னதாக ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.