மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், பப்ஜி விளையாட்டுக்கும் அடிமையானார்.

இதனால், தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, நேஹா தன் கணவரிடம் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியிருப்பதை விட்டுவிட்டு வேலை தேடுமாறு கூறியிருக்கிறார்.
இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கடந்த சனிக்கிழமை இரவு நேஹாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். கொலை செய்தது மட்டுமல்லாமல் நேஹாவின் மைத்துனருக்கு கொலை பற்றி மெசேஜ் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அதன்பின்னர் அவரின் வீட்டுக்கு வந்த நேஹாவின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து பேசியிருக்கும் போலீஸ் அதிகாரி உதித் மிஸ்ரா, “வீட்டிற்குள் கழுத்து நெரித்த காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதில், கணவர் தலைமறைவாகிவிட்டார்.
முதற்கட்ட விசாரணையின்படி, கணவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும், அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் நேஹாவின் குடும்பத்தினர், ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் கேட்ட வரதட்சணை கொடுத்த பிறகும் வரதட்சணையாக கார் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேஹாவின் சகோதரர் ஷேர் பகதூர் படேல், “என் சகோதரிக்கு இந்த மே 25-ம் தேதி திருமணம் நடந்தது. ரஞ்சித் தொடர்ந்து வரதட்சணை கேட்டுக்கொண்டே இருந்தார்.
சமீபத்தில் வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். அதனால் வேலை ஏதாவது தேடுமாறு கூறிய என் சகோதரியை அவர் சண்டையிட்டு கொன்றுவிட்டார்.
அதோடு என் மைத்துனருக்கு, “நேஹாவைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள். அவரை நான் கொன்றுவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நீ செய்” என்று மெசேஜ் செய்தார்.
இந்தக் கொலையில் இதுவரையிலும் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. ரஞ்சித் மட்டுமல்லாமல் அவரின் தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட வேண்டும்.
அவர்கள் அனைவரும் நேஹாவைத் துன்புறுத்தினர். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மறுபக்கம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறும் போலீஸ், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.