Doctor Vikatan: என்னுடைய தோழி, மாதம் ஒருமுறை தானாகவே தன் முடியின் நுனிகளை வெட்டிவிடுவாள். அப்படி வெட்டினால்தான் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை. வெட்ட, வெட்ட முடி வளர்ச்சி அதிகரிக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.

முடியை அடிக்கடி வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை, குறைந்தபட்சம் அரை அங்குலம் அளவுக்காவது முடியின் நுனியை ட்ரிம் (Trim) செய்வது நல்லது.
பொதுவாக, முடியின் நுனிப் பகுதி அல்லது அடிப்பாகம் பலவீனமாக இருக்கும். தலையில் உள்ள முடி அடர்த்தி நுனியில் இருக்காது. நுனிப்பகுதியில் பிளவுபட்ட முடிகள் (Split Ends), முடி வளைதல் மற்றும் அடர்த்திக் குறைவு ஆகியவை இருக்கும்.
நான்கு வாரங்களுக்கு ஒருமுறை முடியின் நுனியை மட்டும் ட்ரிம் செய்யலாம். எப்போதுமே, மேலிருந்து, அதாவது வேரிலிருந்துதான் முடி வளரும். அது கீழிருந்து வளர்வதில்லை என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நுனிகள் பலவீனமாக, உடைந்த பிளவுகளுடன் இருப்பதை ‘புரோக்கன் எண்ட்ஸ்’ (Broken Ends) என்று சொல்வோம். அப்படி பிளவுபட்டு, உடைந்து போனால், அதை மறுபடி சரிசெய்ய முடியாது.
மண்டைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முடியும் ஆரோக்கியமாக இருக்காது. எனவே, கூந்தல் நுனிகளை அவ்வப்போது லேசாக வெட்டிவிடுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

சிலருடைய முடி அமைப்பைப் பார்த்தால், தலையில் அடர்த்தி அதிகமாக இருக்கும். கீழே உள்ள முடியானது குச்சிபோல மெலிந்து இருக்கும். முடியின் நுனிகள் பிளவுபட்டு பாதிக்கப்படுவதுதான் காரணம்.
ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவர்கள், மாதத்திற்கு ஒருமுறை சலூன் சென்று முடியை வெட்டிக்கொள்வதால், அவர்களுக்கு முடியின் நுனிகள் வெடிப்பது 99 சதவிகிதம் தவிர்க்கப்படுகிறது.
மிக அரிதாக, அளவுக்கதிகமாக முடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். எனவே, முடியை வெட்டுவதைவிட, நுனியை மட்டும் ட்ரிம் செய்வது ஆரோக்கியமானது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.