கிரிக்கெட் உலகின் கடவுளாக கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது சாதனைகளால் மட்டுமல்ல, மிகவும் ஒழுக்கமான தனிப்பட்ட வாழ்க்கையாலும் அறியப்படுபவர். அஞ்சலி டெண்டுல்கருடனான அவரது காதல் திருமணம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அஞ்சலியை மணப்பதற்கு முன்பாக, சச்சினின் பெயர் 90-களின் பிரபல நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டது பலரும் அறியாத ஒன்று. அந்த நடிகை வேறு யாருமல்ல, தற்போது பிக் பாஸ் 18 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஷில்பா ஷிரோத்கர் (Shilpa Shirodkar) தான்.
Add Zee News as a Preferred Source

பரவிய வதந்திகள்
90-களில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் உலகம் இரண்டும் நெருங்கிய தொடர்புடையவையாக இருந்தன. அந்த சமயத்தில், சச்சின் டெண்டுல்கரும், நடிகை ஷில்பா ஷிரோத்கரும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் தீயாக பரவின. இருவரும் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வதந்திக்கு கூடுதல் பலம் கிடைத்தது. சச்சின் அப்போது தான் கிரிக்கெட்டில் உச்சத்தை எட்டி வந்தார். ஷில்பாவும் ‘ஹம்’, ‘கோபி கிஷன்’ போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றிருந்தார்.
ஷில்பா ஷிரோத்கர் சொன்ன விளக்கம்
நீண்ட வருடங்களுக்கு பிறகு, சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த வதந்திகள் குறித்து ஷில்பா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் ‘ஹம்’ (Hum) படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது தான் சச்சினை முதன் முறையாக சந்தித்தேன். சச்சின் வசித்த அதே பகுதியில்தான் (மும்பை பாந்த்ரா கிழக்கு) என் உறவுக்கார சகோதரரும் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவார்கள். அந்த தொடர்பின் மூலமாக தான் எனக்கு சச்சினைத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “நாங்கள் சந்தித்தது ஒரே ஒரு முறை தான். ஒரு நடிகையும், ஒரு கிரிக்கெட் வீரரும் சந்தித்து பேசினால் உடனே அது காதலாகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள். ஆனால், உண்மையில் அந்த சமயத்திலேயே சச்சின், அஞ்சலியை தீவிரமாக காதலித்து வந்தார். அது எங்கள் நண்பர்கள் வட்டாரத்திற்கு தெரியும். ஆனால், வெளியுலகிற்கு தெரியாது என்பதால், என்னுடன் இணைத்து பேசினார்கள்” என்று விளக்கமளித்தார்.
சச்சினின் ரியாக்ஷன் என்ன?
வழக்கமாக வதந்திகளை கண்டுகொள்ளாத சச்சின், ஒரு பழைய பேட்டியில் இதுகுறித்து கோபமாகவே பதிலளித்திருந்தார். “உங்களை பற்றி நீங்கள் கேட்டதிலேயே முட்டாள்தனமான விஷயம் எது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நானும் ஷில்பா ஷிரோத்கரும் காதலிப்பதாக கூறப்படுவது தான். உண்மையை சொல்லப்போனால், எனக்கு அவரை யாரென்றே தனிப்பட்ட முறையில் தெரியாது” என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
தற்போதைய நிலை
சச்சின் 1995-ம் ஆண்டு தன்னைவிட 6 வயது மூத்தவரான மருத்துவர் அஞ்சலியை மணந்தார். இவர்களுக்கு சாரா, அர்ஜுன் என இரு பிள்ளைகள் உள்ளனர். மறுபுறம், நடிகை ஷில்பா ஷிரோத்கர் 2000-ம் ஆண்டு அபரேஷ் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் குடியேறினார். தற்போது மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தி வரும் ஷில்பா, பிக் பாஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆக, சச்சின் – ஷில்பா காதல் என்பது வெறும் கற்பனையான வதந்தியே தவிர, அதில் துளியும் உண்மையில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
About the Author
RK Spark