Hockey Men's Junior WC: இறுதிப்போட்டி கனவை இழந்த இந்தியா; அரையிறுதியில் ஜெர்மனியிடம் படுதோல்வி

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது.

முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளில், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று சென்னையில் மாலை 5:30 மணியளவில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs அர்ஜென்டினா அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஸ்பெயின் vs அர்ஜென்டினா
Hockey Men’s Junior WC – Spain vs Argentina

போட்டி ஆரம்பித்த 6-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது ஸ்பெயின். அதற்குப் போட்டியாக 20-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவும் கோல் அடிக்க ஆட்டத்தின் முதற்பாதி முடிவில் இரு அணிகளும் 1 – 1 என சமநிலைக்கு வந்தன.

அதைத்தொடர்ந்து பரபரப்பாகச் சென்ற இரண்டாம் பாதியில் ஸ்பெயின் அணி வீரர் செர்ராஹிமா கடைசி 5-வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 2 – 1 என அர்ஜென்டினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோத இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தியாவும், ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின.

ஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஜெர்மனி 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி ஷூட் வாய்ப்பில் கோல் அடித்ததோடு, அடுத்த நிமிடத்திலேயே மேலும் ஒரு கோல் அடித்து 2 – 0 என முன்னிலை பெற்று இந்தியாவை அழுத்தத்துக்குள்ளாக்கியது.

இரண்டாம் பாதியிலும் தனது வேகத்தை நிறுத்தாத ஜெர்மனி, இந்தியாவை கோல் கணக்கைத் தொடங்கவிடாமல் 39-வது நிமிடத்திலும், 48-வது கோல் அடித்து மேலும் அதிர்ச்சி கொடுத்தது.

அடுத்த நிமிடத்திலேயே இந்திய வீரர் அனுமோல் எக்கா ஒரு கோல் அடித்து இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார்.

ஆனாலும், இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 5 – 1 என அபார வெற்றி பெற்று இந்தியாவின் இறுதிப்போட்டி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப்போட்டி டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.