IND vs SA prediction : டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களுக்குப் பிறகு இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபாட்டி மைதானத்தில் இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது. ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இந்த டி20 தொடரையும் வெற்றியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்..
Add Zee News as a Preferred Source
சுப்மன் கில் ரிட்டன்ஸ்
இன்றைய போட்டியில் கேப்டன் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது. சுப்மன் கில் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் அணிக்குத் திரும்பியிருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. டெஸ்ட் தொடரில் கழுத்து காயம் காரணமாக விலகிய கில், முழு உடற்தகுதி பெற்று அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும், ஆசியக் கோப்பையின்போது காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மீண்டும் களமிறங்குவது, அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் கூடுதல் பலம்.
தென்னாப்பிரிக்காவின் சவால்:
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் வலுவாகவே உள்ளது. டேவிட் மில்லர், குயின்டன் டி காக் போன்ற டி20 ஸ்பெஷலிஸ்டுகள் அணியின் பேட்டிங்கிற்குத் தூணாக உள்ளனர். வேகப்பந்து வீச்சில் அன்ரிச் நோர்ட்ஜே ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டி20 அணிக்குத் திரும்பியிருப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருக்கும். லூங்கி இன்கிடி மற்றும் இளம் வீரரான க்வெனா மஃபாகா ஆகியோர் வேகப்பந்து வீச்சில் மிரட்ட காத்திருக்கின்றனர்.
கட்டாக் பிட்ச் நிலவரம்
கட்டாக்கில் உள்ள பாரபாட்டி மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்குச் சமமான உதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 140 முதல் 160 வரை இருக்கலாம். போட்டி செல்லச் செல்ல பிட்ச் மெதுவாக மாறுவதால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இரவு நேரத்தில் பனிப்பொழிவு (Dew) ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசி சேஸிங் செய்யவே முயற்சிக்கும். இன்றைய போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக (60%) இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்தியா தென்னாப்பிரிக்கா இதுவரை
டி20 சர்வதேசப் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை சந்தித்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்திய அணி 18 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்க அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியை இந்தியாவில் நேரடியாகக் காண, ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கைப் பொறுத்தவரை, ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் கண்டு களிக்கலாம். போட்டி இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க சுற்றுப் பயண அப்டேட்
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் முழுமையாக விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுத்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த நிலையில் தான் இரு அணிகளும் டி20 தொடரில் இன்று முதல் களம் காண உள்ளன.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More