2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் நெருங்கும் வேளையில், இந்திய அணியின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக பிசிசிஐ அதிகாரிகளுடன் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடத்திய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்தும், அவர்களுக்கு மாற்றாக யாரை உருவாக்கலாம் என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source

கோலிக்கு மாற்று யார்?
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதற்கு சரியான தீர்வாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று கம்பீர் உறுதியாக நம்புகிறார். “கோலியை போலவே தொடக்கத்தில் நிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் விளையாடக்கூடிய திறமை ருதுராஜிடம் உள்ளது. அவரை ஓப்பனராக மட்டுமின்றி, கோலியின் இடமான ஒன்-டவுன் அல்லது 4-வது இடத்திலும் பயன்படுத்தி பார்க்கலாம்,” என்று கம்பீர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் சதம் அடித்தது கம்பீரின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவின் இடத்திற்கு ஏற்கனவே யாஷஸ்வி ஜெய்ஷ்வால் தயாராக இருப்பதால், ஓப்பனிங் குறித்து பெரிய கவலை இல்லை. ரோஹித் இல்லாத நேரங்களில் ஜெய்ஷ்வால் அந்த பொறுப்பை சிறப்பாக செய்வார் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கான்
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை, விராட் கோலி இல்லாத நேரங்களில் 4-வது இடத்தில் முழுநேர டெஸ்ட் பேட்ஸ்மேன் ஒருவரைத்தான் களமிறக்க வேண்டும் என்பதில் கம்பீர் உறுதியாக உள்ளார். அந்த இடத்திற்கு சர்ஃபராஸ் கான் சரியான தேர்வாக இருப்பார். உள்ளூர் போட்டிகளிலும், சமீபத்திய டெஸ்ட் வாய்ப்புகளிலும் அவர் வெளிப்படுத்திய திறமை அவருக்குதொடர்ச்சியான வாய்ப்பை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் வரிசையில் மாற்றம்
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை டெஸ்ட் போட்டிகள் பெரிதாக இல்லை என்பதால், அதற்குள் அணியின் பேட்டிங் வரிசையை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கே.எல். ராகுலை ஒன்-டவுன் இடத்தில் களமிறக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இனி இந்திய டெஸ்ட் அணி பேட்டிங்கில் சொதப்பாத வகையில் ஒரு புதிய மற்றும் வலுவான வரிசையை உருவாக்க கம்பீர் உறுதியளித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலக கோப்பையில் விளையாடினால் அது அணிக்கு மிகப்பெரிய பலம். ஆனால், அதுவரை காத்திருக்காமல் இப்போதிருந்தே மாற்று வீரர்களை வளர்த்தெடுப்பது அவசியம் என்பதே கம்பீரின் வியூகமாக உள்ளது.
About the Author
RK Spark