`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியில் கட்டிகொடுத்திருக்க வேண்டிய வீடுகளை ரூ. 6,43,000 பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியிருந்த தகவல் பாதிப்படைந்த மக்கள் தலையில் இடியாக வந்து விழுந்தது.

மொத்தமாக இவ்வளவு பணம் கட்ட முடியாது என்றும் தவணை முறையில் கட்டுவதாகவும் 2022-ஆம் ஆண்டு மனு அளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் வீடுகள் இன்னும் கொடுக்கப் படவில்லை என்று நேற்று (டிச.8) இந்திய மீனவர் மகளிர் தொழிற்ச் சங்கத்தினர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டு போராடினர்.

இது தொடர்பாக பேசிய இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் மீனவ சாந்தி, “சுனாமில பாதிக்கப்பட்ட எங்களுக்கு கார்கில் நகர்ல தற்காலிகமா இடம் கொடுத்திருந்தாங்க, அந்த வீடுகள் தீப்பற்றி எரிந்ததால அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டோம்.

சுனாமியில பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கப்பட்ட வீடுகள் எங்கள்ல பலருக்கும் 21 வருஷமாகியும் வரல. 21 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான மனுக்கள கலெக்டர், மீன்வளத்துறை, முதல்வர், குடிசை மாற்று வாரியம்னு கால் தேய தேய அலஞ்சி குடுத்துட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய வீடுகள் இன்னும் வரல.

எங்கள்ல பலர் பிளாட்பாரம், குடிசை வீடு, வாடக வீடுனு வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த அவலங்களை முன்வைத்து பலகட்ட போராட்டங்கள நடத்திடு இருக்கோம். சுனாமிய தொடர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல குடிசை வீட்டுல இருந்தோம், அங்க தீ விபத்து ஏற்பட்டு அப்புறப்படுத்தப்பட்டடோம். அதே இடத்துல தான் இப்போ 15 மாடி குடியிருப்பு கட்டி இருக்காங்க.

நாங்க பல முறை போராடுனத தொடர்ந்து அதுல எங்களுக்கும் வீடு ஒதுக்கி இருந்தாங்க. ஆனா, 6 லட்சம் பணம் கட்டனும்னு சொன்னாங்க. அதையும் ஒப்புக்கொண்டு, 50,000 முன்பணம் கட்டுனோம். மாதம் 2000 என்ற தவணை முறையில மீதி பணத்த வீடு கொடுத்ததும் கொடுப்பதா மனு கொடுத்தோம். வீடு கட்டி முடித்த பின் முன்னிரிமை கொடுக்கப்படும்னு சான்றிதழ் கொடுத்தாங்க.

ஆனா வீடு கட்டி முடிந்த பின்னும் வீடு கொடுக்காம 6,00,000 மொத்தமாக கேக்குறாங்க, அதுக்கு எங்களுக்கு வசதி இல்லனு முறையிட்டப்போ, வங்கில லோன் வாங்க சொன்னாங்க, வங்கில லோன் வாங்க போனா மாதம், 7000 ரூபா கேக்குறாங்க, இன்னும் வீடே தரல. ஆனா வங்கியிலருந்து லோன் காசு கேக்க வந்துட்டாங்க. வங்கியில பணம் கட்ட நாங்க தயாரா இல்ல, வாரியத்துல கட்டிக்கிறோம். எங்களுக்கு உடனே வீடு வழங்கனும்.” என்று நிலவரத்தைச் சொன்னார்.

“உலக வங்கி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனாக பணம் கொடுக்கவில்லை, நிதியாகக் கொடுத்தார்கள்.” என்று சமூக ஆர்வலர் கீதா ராமகிருஷ்ணன் கூறுகிறார். கீதா, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு பல இடங்களில் முறையிட்டு வீடுகள் கட்டிக்கொடுக்க போராடியவர்.

கீதா ராமகிருஷ்ணன்

மேலும் தொடர்ந்த கீதா, “இங்கே நாம் குறிப்பிடும் 158 குடும்பங்களும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மீன்வளத்துறையால் சான்றளிக்கப் பட்டவர்கள். இந்த 158 குடும்பங்களைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வீடு கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் போராட முன்வரவில்லை. இந்திய மீனவர் மகளிர் தொழிற்ச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் போராட முன்வந்துள்ளனர். தற்போது சிக்கலே கார்கில் நகரில் தீ விபத்துக் காரணமாக அப்புறப்படுத்தப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதே கார்கில் நகரில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் முன்னுரிமை கொடுக்கப்படாதது ஏன் என்பதுதான்.” என்றார்.

மேலும், நகர்ப்புற குடியிருப்பு நில உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் கூறுகையில், “சுனாமி வந்த போது பல இடங்களில் இருந்து நிதி வந்தது, பலருக்கு வீடு அப்போது கட்டிக் கொடுக்கப்பட்டாலும் அதில் இப்படி வீடுகள் வழங்கப்படாமல் இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். தட்டிக் கழித்தே 21 ஆண்டுகளைக் கடத்தி விட்டார்கள். நியாயமாக இந்த மக்களுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் ஆனால், அரசாங்கம் தொடர்ந்துத் தட்டிக் கழித்ததால் மக்களும் சமரசமாகி பணம் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

இங்கு பிரச்சனையே பயனீட்டாளர் பங்கீட்டுத் தொகை என்பதுதான், இதன் அடிப்படையில் தான் மக்களிடம் பணம் கேட்கிறார்கள். ஒரு முக்கியமான விஷயத்தை அரசு மறந்து விட்டது, இந்த விதி வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த மக்களுக்கு வீடு வந்திருக்க வேண்டும். அதைத் தாமதப்படுத்தியதற்கு அரசுதான் பொறுப்பு.

செபஸ்டின், நகர்ப்புற குடியிருப்பு நில உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்

நியாயமாக அரசுதான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இதை மறந்துவிட்டு மக்களிடம் பணம் வசூலிப்பது எப்படி நியாயமாகும். இந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், கடலில் இறங்கிக்கூட போராடினார்கள். பல போராட்டங்களுக்குப் பின்னரும், பிரச்சனையைத் தீர்க்க யாருக்கும் மனமில்லை.” என்றார் காட்டமாக.

இது தொடர்பாக விசாரிக்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர் ஸ்ரேயா.பி.சிங் அவர்களை தொடர்புகொள்ள முயன்றோம், அவர் நம் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. மேலும், மீன்வளத்துறை இயக்குனர் கே.வி.முரளிதரன் அவர்களையும் தொடர்புகொள்ள முயன்றோம், மற்றொருவர் போனை எடுத்து, ‘சார் மீட்டிங்ல இருக்காரு, உங்க நம்பர் கொடுங்க அவருகிட்ட சொல்றேன்’ என்றார். கட்டுரையை எழுதி முடித்த பின்னும் இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம், கடைசி வரை பதில் இல்லை. அவர்கள் பதில் அளிக்கும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.

– கோகுல் சரண்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.