நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும அவரது உறவினர் முத்துசுடலை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தில் நள்ளிரவில் பணத்தை வைத்தது மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த விஜய் என்பது விசாரணையில் தெரியவந்தது. மும்பை தாராவியில் தலைமறைவாக இருந்த விஜய்யைக் கைதுசெய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.40 ஆயிரம் பணத்தை கூலியாகப் பெற்றுக் கொண்டு அதிகாரியின் அலுவலகத்திற்குள் பணத்தை வைத்துச் சென்றது தெரிய வந்தது. அவரும் இது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு வீரரான மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான முருகேஷ் ஆகிய இருவரையும் நெல்லை மாநகர போலீஸார் கைதுசெய்தனர்.

இதில், தீயணைப்பு அலுவலகத்தில் பணத்தை வைக்க விஜய்க்கு முருகேஷ் உதவியதாகக் கூறப்படுகிறது. இவரின் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஆகும். இந்த விவகாரத்தின் பின்னணியில் நெல்லை மாவட்டத்தின் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் திருப்பூரில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் போலீஸாரிடம் சிக்கியுள்ளதால், தீயணைப்புத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. துணை இயக்குநர் அலுவலகத்தின் சாவியை விஜய்யிடம் கொடுத்தது யார்? சாவியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகாரி யார்?

விஜய் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த தீயணைப்பு துறை சீருடை யாருடையது? லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரகசிய தகவலை கசிய விடுவது யார்? என பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.